நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை! ஒஸ்லோ பிரதி மேயர் கம்ஷாயினி

என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது. அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லையென நோர்வேயின் ஒஸ்லோ மாநாகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள், சங்கங்கள் உள்ளன அங்கும் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் தலைமைத்துவம் குறித்த பல கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இந்நிலையில், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நோர்வேயின் ஒஸ்லோ மாநகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இலங்கைக்கு பல தடவை வந்து சென்றுள்ளேன். நான் விடுமுறையில் முதல் காலங்களில் இலங்கைக்கு வந்துள்ளேன். குறிப்பாக பெற்றோருடன் தான் வந்துள்ளோன். நான் நீண்ட நாட்களாக செய்வதற்கு விரும்பி வந்த விடயம் தற்போதைய விஜயமாக தான் இருக்கும்.

“பெண்களும் செய்யலாம்” என்ற ஒரு தலைமைத்துவ பயிற்சிப்பட்டறையை நோர்வேயிலுள்ள தொழிலாளர் கட்சி அங்குள்ள நோர்வேயின் பீப்பிள்ஸ் எயிட் உடன் இணைந்து அங்கு மேற்கொண்டு வருகின்றனர். இது பல நாட்களில் பெண்களுக்கு ஒரு தலைமைத்துவப் பண்புகளை கொடுத்துள்ளது.

அந்த வகையில் இலங்கையின் கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பெண்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு, அவர்கள் கூறும் விடயங்களை ஆராய்ந்து, அதேசமயம் நோர்வே நாடு எவ்வாறு கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் வறுமையான நாடாக இருந்து இன்று எவ்வளவு தூரம் முன்னுக்கு வந்துள்ளது என்ற விடயத்தை பகிர்ந்து கொள்வதற்கு நான் இலங்கைக்கு வந்துள்ளேன்.

இவ்வாறு இலங்கைக்கு வருகைதந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமை எனக்கு மிகவும் சந்தோசமாகவுள்ளது.இதைவிட மேலும் செய்யவும் நான் விரும்புகின்றேன்.

கேள்வி- தமீழழ விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு வகிபாகத்தை வழங்கவில்லையென்று தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தீர்கள். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள் ?

பதில் – என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது. நான் நோர்வேயின் ஒஸ்லோ மாநாகர சபையில் கூட அங்கும் இருபாலாருக்கும் சமவுரிமை இருக்கவேண்டுமென்று தான் விரும்புகின்றேன்.

இதுவரைக்கும் அங்கும் சமவுரிமை 50 க்கு 50 வீதம் கிடைக்கவில்லை. அதற்காக நான் கஷ்டப்பட்டு முயற்சிகள் எடுத்து வருகின்றேன். அதேபோல் நோர்வே பாராளுமன்றிலும் ஆண், பெண்கள் 50 க்கு 50 வீதம் இருக்கவேண்டுமென்றே விரும்புகின்றேன். எங்குபோனாலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் தற்போதைய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ள வந்துள்ளவர்கள் அனைவரும் ஆண்களாகவே உள்ளனர்.

அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை. நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள் , சங்கங்கள் உள்ளன அங்கும் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கின்றேன்.

கேள்வி- தமிழீழ விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை வழங்கவில்லையென்பதை நீங்கள் சரியென்று நினைக்கின்றீர்களா?

பதில் – நான் அவ்வாறு சொல்லவில்லையே. நான் கூறியது எல்லா மட்டங்களிலும் அநேகமான பெண்கள் உள்ளனர். வளர்ச்சியடைந்து செல்லும் போது அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று தான் தெரிவித்தனான். அதுவும் நான் பாராட்டுத் தெரிவித்ததன் பின்னர்தான் நான் அதையும் தெரிவித்திருந்தேன். குறை சொல்வதற்காக நான் எதையும் சொல்லவில்லை நாங்கள் தமிழர்களை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டியிருந்தேன்.

கேள்வி – விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை வழங்கியிருந்தனரா வழங்கியிருக்கவில்லையா ?

பதில் – இடம்கொடுத்துள்ளனர். ஆனால் மேலும் தலைவிகள் வரலாம்.

கேள்வி – உங்களை தொடர்புபடுத்தி சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றனவே ?

பதில் – நான் நினைக்கின்றேன் ஒரு விடயத்தை ஒரு கோணத்தில் இருந்து பார்க்க முடியாது. அனைத்து கோணங்களிலிருந்தும் பார்க்க வேண்டும். அனைவருக்கும் கருத்துக்கூறும் உரிமையுண்டு.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like