சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் பொருத்துபவர்கள் மீது நடவடிக்கை: யாழ்.மாநகர முதல்வர்

சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை பொருத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர எல்லைப் பகுதியில் பருத்தித்துறை முதல் கல்வியங்காடு ஊடாக திருநெல்வேலிப் பகுதியில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை அகற்றும் பணிகள் இன்று முதல்வர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை வழங்குவதற்கு பெயர் தெரியாத நிறுவனம் ஒன்று மின்கம்பங்களை நாட்டி கேபிள் இணைப்புக்களை வழங்கியுள்ளனர்.

மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் உட்பட பலர் சென்று சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை வழங்கும் நிறுவனத்தினருக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கிய போதும், இதுவரையில் மாநகர சபையுடன் தொடர்புகொள்ளவில்லை.

ஏற்கனவே, ஒரு நிறுவனம் கேபிள் இணைப்புக்களை வழங்குவதற்கான அனுமதி விண்ணப்ப படிவத்தை மாநகர சபையினரிடம் வழங்கியுள்ளனர்.

மாநகர சபையும், சபையினரும் கலந்துரையாடி, எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ள போதிலும், அனுமதி கோரியுள்ள நிறுவனத்திற்கே மாநகர சபையினால் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த நிறுவனம் ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊடாக வந்து யாழ்.மாநகர எல்லைப் பகுதிக்குள் நிலங்களை தோண்டி மின்கம்பங்களை நாட்டி கேபிள் இணைப்புக்களை வழங்கியுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்கமுடியாது. இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மாநகர சபையின் அனுமதியின்றி சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை மேற்கொண்டால், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென பொலிஸ் நிலையத்திற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். கேபிள்கள் அறுத்து ஒழிக்கப்படுவதுடன், மின்கம்பங்கள் மாநகர சபை வளாகத்தில் சேமிப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பருத்தித்துறை வீதியில் சுமார் 50 ற்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும். தொடர்ந்தும் சட்டவிரோதமான கேபிள் இணைப்புக்களை பொருத்தினால், தொடர்ந்தும் மாநகர சபை அகற்றும் பணிகளை முன்னெடுக்கும் என்றும் மாநகர முதல்வர் என மேலும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like