தமிழகத்தில் காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பலை தடுக்க முயன்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியயை அடுத்த, சிறுகனூர் அருகே உள்ள திண்ணக்குளம் நடுத் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு தமிழ்வாணன்(20) என்ற மகன் உள்ளார்.
தமிழ்வாணன் சமயபுரம் அருகே இருக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இவரும், சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் 4–ம் ஆண்டு படித்து வரும் 20 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படிக்கும்போதே நட்புடன் பழகி வந்தனர். அதன் பின் காதலர்களாகினர்.
இந்நிலையில் பொங்கல் தினம் என்பதால் நேற்று விடுமுறைக்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சென்றுள்ளனர்.
பல்வேறு இடங்களுக்கு சென்ற இவர்கள் இரவு 07.30 மணி அளவில் குமுளூர் வனப்பகுதி அருகே சென்றபோது தமிழ்வாணன் மோட்டார் சைக்கிளை காட்டு பகுதிக்குள் ஓட்டிச் சென்றார்.
அப்போது அங்கு இருவரும் அமர்ந்து தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட அங்கிருந்த நான்கு பேர் தமிழ்வாணனை தள்ளிவிட்டு, காதலியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதனால் காதலியை மீட்பதற்கு தமிழ்வாணன் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கீழே இருந்த மதுபாட்டில்களை எடுத்து உடைத்து அவரை குத்தினர்.
இதனால் தமிழ்வாணன் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இதைக் கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது.
காதலன் கண்முன்னே இறந்ததைக் கண்ட காதலி, உடனடியாக இது குறித்து அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த பொலிசார் தமிழ்வாணனின் உடலை மீட்டு, காதலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






