யாழில் சடலத்தை அடையாளம் காட்டிய கால் விரல்!

யாழ்ப்பாணம் நாவற்குளியில் ரயிலில் மோதி உயிரிழந்தவரை அவரது காலில் காணப்பட்ட மேலதிக விரல் அடையாளம் காண உதவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவற்குளி தொடருந்து பாலத்தை அண்மித்த பகுதியில் தண்டவாளத்தில் நடந்து சென்றவரை கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து மோதியது.

கால்கள் மற்றும் முகம் ஆகியவை சேதமடைந்த நிலையில் அவரது சடலம் நாவற்குளி தொடருந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இரவு 8.00 மணி வரை அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் சடலத்தை ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் நாவற்குளி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் உயிரிழந்தவர் அணிந்திருந்த சாரத்தைக் கொண்டு வீடு வீடாகச் சென்றதில், இன்று காலை சாவகச்சேரி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த அவரது மனைவி சடலத்தின் காலில் மேலதிக விரல் காணப்பட்டதையடுத்து உயிரிழந்தவர் தனது கணவர் என உறுதிப்படுத்தினார்.

நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியைச் சேர்ந்த யோசப் கிங்ஸ்லி ( வயது 41 ) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவரது இறப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

அறிக்கையைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம், விசாரணைகளை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சாவகச்சேரி மருத்துவமனையில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸாரைப் பணித்தார்.