மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களை சட்டவிரோதமான முறையில் மலேசியாவில் இருந்து எடுத்துவர முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கம்பஹா, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 62 வயதுடைய சிறு வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து வகைகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் நேற்று மாலை 5 மணியளவில் மலேசியாவில் இருந்து வருகை தந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 315 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேக நபரின் பயணப்பையில் இருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள் ஒரு தொகையும், பெண்களுக்கான இரவுநேர அழகு சாதனப்பொருட்கள் ஒரு தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபருக்கு 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அரசுடமையாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.






