கிழக்கு மாகாணத்தின் உயர் பதவிக்கு தமிழரை அதிரடியாக நியமித்த ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹவினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நியமனங்களை வழங்குதல், இடமாற்றங்களை செய்தல், உயர் பதவிகளுக்கு நபர்களை நியமித்தல் உள்ளிட்ட அரச சேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதியுயர் சபையின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரைகாலமும் இந்த ஆணைக்குழுவின் தலைவராக கொழும்பை சேர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பீ.டபிள்யூ.டி.சி.ஜயதிலக்க செயற்பட்டிருந்தார்.

பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உப வேந்தராக கடமையாற்றிய நீண்ட கால அனுபவமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்க கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த போதோ அல்லது அதற்கு பின்னரோ எந்தவொரு முன்னேற்றமான செயற்பாட்டையும் பல்கலையில் அவர் மேற்கொள்ளவில்லை.

அவர் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிய போது பல்கலையில் எந்த வளர்ச்சியும் இல்லை. அவர் தனது சேவைக்காலங்களில் வெளிநாட்டு பயணங்களை மட்டுமே சரிவர மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த பல ஊழல்கள் மற்றும் முறைகேடான நியமங்களுக்கும் உடந்தையாக இருந்தார் என்பதன் அடிப்படையில் மக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்ட ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக நியமித்துள்ளமை தமிழருக்கு பெருமை என பலர் கூறினாலும், இது பெருமைப்பட வேண்டிய விடயமா? இல்லையா? என்பதை நியமனம் வழங்கியவர்களே தீர்மானிக்க வேண்டும் என கிழக்கு மாகாண தமிழர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலையில் பல்வேறுபட்ட படிமுறை வளர்ச்சிகளை ஏற்படுத்துவதை விட்டு விட்டு நடைமுறை சாத்தியமற்ற வேலை செய்து, கிழக்கு பல்கலையின் அகராதியில் இவர் இருந்த காலமே வளர்ச்சி காணாத ஒரு கரி காலம் என பல்கலையில் பணிபுரியும் பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியரொவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒட்டு மொத்தத்தில் இவரது நியமனம் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு மகிழ்ச்சியையும், தமிழர்களுக்கு கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.