சுக்கிர யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்?

நல்ல மனைவி, வீடு, வாகனம், மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து நற்பலன்களையும் தருபவர் சுக்கிரன் ஒருவரே. அதனால் லௌகீக வாழ்க்கைச் சுகங்களுக்கு சுக்கிரனே அதிபதி.

ஒருவரின் ஜாதகத்தில் சுபராக வலுப்பெற்ற சுக்கிரன் எப்படி அமைந்திருந்தால் ஜாதகருக்கு நன்மைகளைச் செய்வார் என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி விளக்குகிறார்.

“ஒன்பது கிரகங்களிலும் மிகமிகத் தனித்தன்மை வாய்ந்தவர் சுக்கிரன். மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுக்கிரனுக்கு உண்டென்று சொன்னால், அது சுக்கிரன் ஒருவர் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவார். மற்ற கிரகங்களுக்கு இந்தச் சிறப்பு கிடையாது.

இயற்கை சுபகிரகங்களில் முதலிடம் வகிக்கும் குருவுக்குக் கூட இல்லாத இந்த அமைப்பு சுக்கிரனுக்கு மட்டுமே இருக்கிறது.ஒரு மனிதனுக்கு பணம், பொருள், பதவி, உணவு, உறைவிடம் உள்ளிட்ட எவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், வம்ச விருத்திக்கு அதிபதியும் சுக்கிரன்தான். இதனால்தான் இவரை `களத்திரகாரகன்’ என்று அழைக்கின்றனர்.

கலைகளின் அதிபதி சுக்கிரன்தான். இசை, நடனம், பாட்டு, நடிப்பு போன்ற அனைத்துக்கும் அடிப்படை இவர்தான் என்பதால் ஜாதகத்தில் இவர் எந்த பாவத்தோடு தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்துக்கு சம்பந்தப்பட்ட கலைத்துறையில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.

உதாரணமாக சுக்கிரன் மூன்றாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் இசையிலும், லக்னம் மற்றும் ஐந்து, பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்டால், கலைத்துறையில் ஒருவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவார். ஒருவருக்கு சுக்கிர தசையோ, சுக்கிர புக்தியோ நடைபெற ஆரம்பித்து விட்டாலே, அவருக்கு சினிமா மற்றும் மீடியாத் துறைகளில் ஆர்வம் ஏற்பட்டு வெற்றிபெறுவார்.

ஜாதகத்தில் சுக்கிரனின் வலுவைப் பொறுத்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், ஒளிப்பதிவாளர், லைட்பாய், டிராலி தள்ளுபவர், ஸ்டுடியோ வாட்ச் மேன் என அவரவரின் ஜாதக வலிமைக்கேற்ப ஜாதகர் கலைத்துறையில் இருப்பார்” என்றவர் தொடர்ந்து தனித்தனியாக சுக்கிரன் ஒவ்வொரு லக்னத்துக்கும் என்ன பலன்களைத் தருவார் என்பதையும் விவரமாகக் கூறினார்.

“மேஷ லக்னத்துக்குக் குடும்பம் மற்றும் களத்திர வீடு எனப்படும் இரண்டு ஏழுக்குடையவராகிறார். சுக்கிரன் இரண்டு, ஏழாமிடங்களில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண பலம் அடைவதன் மூலம் யோகம் உண்டாகும்.

ரிஷபத்துக்கு சுக்கிரன் லக்னாதிபதியாகி, லக்னத்தில் ஆட்சி பெற்று யோகத்தைத் தருவார். இந்த அமைப்பு ரிஷப லக்னத்துக்கு மிகவும் சிறப்பான ஒரு நிலையாகும். அதுவும் கிருத்திகை நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் கூடுதலான யோகங்களை அளிப்பார்.

மிதுன லக்னத்துக்கு சுக்கிரன் பத்தாம் வீட்டில் உச்சம் மற்றும் ஐந்தில் ஆட்சி பெற்றால், சிறந்த யோகங்களைத் தருவார். இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு இளமையிலேயே அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். ரிஷபத்துக்குச் சொன்னதைப் போலவே கலைத்துறை ஈடுபாடு, ரெஸ்டாரன்ட், டெக்ஸ்டைல்ஸ் போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி லாபங்களை அள்ளித் தருவார்.

கடக லக்னத்துக்கு சுக்கிரன் நான்காமிடத்தில் ஆட்சியும் மூலத் திரிகோணமும் பெற்று யோகம் செய்வார். இங்கிருக்கும் சுக்கிரன் திக் பலமும் பெறுவார் என்பதால் இது கூடுதலான நன்மைகளை ஜாதகருக்குத் தரும். பதினொன்றாமிடத்தில் ஆட்சி, மற்றும் ஒன்பதாமிடத்தில் உச்சம் பெற்றிருந்தாலும் நன்மைகள் உண்டு.

சிம்மத்துக்குப் பத்தாமிடத்தில் தனித்து ஆட்சி பெற்று யோகத்தைச் செய்வதைவிட பத்தில் யோகர்களுடன் இணைவது நல்லது. மூன்றாமிடத்தில் ஆட்சி பெற்று தன் தசையை நடத்தினால் நல்ல சொகுசு வாழ்க்கையைத் தருவார். எட்டில் உச்சம் பெறுவது சுமார் நிலைதான்.

கன்னி லக்னத்துக்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் உச்சம் பெற்றால் சிறப்பான யோகம் உண்டு. இரண்டு, ஒன்பதில் ஆட்சி பெறுவதும் நல்ல நிலைதான். லக்னாதிபதி புதனைவிட சுக்கிரன் மட்டுமே இந்த லக்னத்துக்கு நல்ல பலன்களைத் தரக்கூடியவர் என்பதால் சுக்கிரன் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும், ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்திலும் இருந்தால் நன்மைகள் உண்டு. சுக்கிரன் உச்சமாகிப் பார்க்கும் ஒரே லக்னம் என்பதும் கன்னிக்கு ஒரு கூடுதல் சிறப்பு உண்டு.

துலா லக்னத்துக்கு சுக்கிரன் லக்னாதிபதி ஆவார் என்பதால், அவர் லக்னத்தில் ஆட்சி பெறுவதன் மூலம் யோகம் கிடைக்கப்பெறும். இந்த லக்னத்துக்கு அவரே அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால், இருபது வருடம் கொண்ட சுக்கிர தசையில் ஒரு பாதி பத்து வருடங்கள் யோகத்தையும், மறுபாதி பத்தில் அவயோகத்தையும் செய்வார். துலாமில் பிறந்தவருக்கு லக்னத்தைத் தவிர வேறு இடங்களில் சுக்கிரன் மேன்மையான பலன்களைத் தருவதில்லை. ஆறில் உச்சம் பெறுவதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களைத் தருவார்.

விருச்சிக லக்னத்துக்கு சுக்கிரன் ஏழு, பன்னிரண்டாம் இடங்களுக்கு அதிபதியாகி மனைவியின் மூலம் யோகம் தருவார். பன்னிரண்டில் ஆட்சி பெற்றால் தனது தசையில் தூர இடங்களுக்கு அனுப்பி வேலை செய்ய வைப்பார்.

தனுசு லக்னத்துக்கு சுக்கிரன் ஆறு, பதினொன்றுக்குடைய பாப கிரகம் என்னும் நிலை பெற்று, நான்காமிடத்தில் உச்சமாகி நன்மை தீமைகளை கலந்து தருவார். பதினொன்றில் ஆட்சியாக இருப்பதே நன்மை. ஆறில் இருப்பது நல்லதல்ல.

மகரத்துக்கு சுக்கிரன் ஐந்து, பத்துக்குடைய ராஜயோகாதிபதி எனும் நிலை பெற்று, ஐந்து, மற்றும் பத்தாமிடத்தில் ஆட்சியாக இருந்தால் நல்ல யோகத்தைத் தருவார். மூன்றில் உச்சமாக இருப்பது, ஓரளவே நற்பலன்களைத் தரும்.

கும்பத்துக்கும் மகரத்தைப் போலவே சுக்கிரன் ராஜயோகாதிபதி எனும் நிலைபெற்று நான்கு, ஒன்பது ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, நான்காமிடத்தில் ஆட்சி மற்றும் திக்பலம் அடைந்தும், ஒன்பதில் ஆட்சி பெற்றும் யோகம் தருவார். இரண்டில் உச்சமாக இருப்பதும் நன்மைகளைத் தரும்.

மீன லக்னத்துக்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷமே இல்லாத பாபராகி லக்னத்தில் உச்சம் பெற்று யோகத்தை தருவார். குருவின் லக்னங்களுக்கு சுக்கிரன் உச்சம் பெறுவது நல்லது அல்ல.

இங்கே சுக்கிரன் உச்சம் பெற்றால் குருவும் அவருக்கு நிகரான வலுவில் இருப்பதே ஜாதகருக்கு நல்ல யோகங்களைச் செய்யும். எட்டில் இருந்தால் இவர்களுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் சென்று பணி செய்யும் அமைப்பு உண்டு. மூன்றில் இருப்பது ஓரளவு நன்மைகளைத் தரும்.