சொந்த செலவில் சூனியம் வைத்த கரவெட்டி தவிசாளர்!

அதிகார துஸ்பிரயோகம் மற்றும் முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டமையினால் தனது சொந்தப்பணம் ஏறத்தாள ரூபா 125,000/= இனை செலுத்தியுள்ளார் கரவெட்டி பிரதேசசபை தவிசாளரான ஐங்கரன்.

திண்மக்கழிவு செயற்திட்டம் ஒன்றிற்காக காணியினை மண் போட்டு நிரப்புவதென கரவெட்டி பிரதேசசபை தீர்மானித்திருந்தது. அதற்கான செலவை மேற்கொள்வதற்காக கடந்த கால வருமானத்தின் ஒருபகுதியை உள்ளூராட்சி அமைச்சின் அனுமதி பெற்று உபயோகிப்பதென சபை தீர்மானித்திருந்தது.

ஆனால் எவ்வித அனுமதியும் கிடைக்க முன்பே தவிசாளர் தன்னிச்சையாக பல நோக்கு கூட்டுறவு சங்கத்திடம் ஏறத்தாள 1000 லீற்றர் டீசலை கடனாக பெற்று திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இது நடந்தது கடந்த வருடம் புரட்டாதி மாதம் நடுப்பகுதியில். பலநாட்களாக கடனை பிரதேசசபை திருப்பி செலுத்தாமையால் கூட்டுறவு சங்கம் வாய்மூலமும் எழுத்து மூலமும் கடனை திருப்பி வழங்குமாறு பிரதேசசபையை தொடர்ந்து கோரி வந்துள்ளது.

இந்நிலையில் முறைகேடான அதிகார துஸ்பிரயோகமான இந்த நடவடிக்கைக்கு அனுமதி கிடைக்காமையால் செயலாளர் கொடுப்பனவு காசோலையில் கையெழுத்திட மறுத்து விட்டார்.

சுமார் மூன்று மாதங்களாக கடன் திருப்பி செலுத்தாத நிலையில் மார்கழி மாத நடுப்பகுதியில் கூட்டுறவு சங்கம் இப்பிரச்சினையை மத்தியஸ்தர் சபைக்கு கொண்டு செல்லவுள்ளதாக தவிசாளருக்கு அறிவித்துள்ளது.

தனது முறைகேடுகள் வெளிவரவுள்ளமையை அறிந்த தவிசாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ஓடி சென்று மார்கழி மாத இறுதிபகுதியிலே 2019 தை மாதத்தின் திகதியிட்ட தனது சொந்த காசோலையினை வழங்கி இப்பிரச்சினையை வெளிக்கொண்டுவர வேண்டாமென சங்கத்திடம் கெஞ்சியுள்ளார்.

அவர்களும் பணம் கிடைக்க வேண்டுமென்பதற்காக இவ்விடயத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் தை மாதத்தில் தவிசாளரின் சொந்த பணத்திலிருந்து குறித்த டீசலுக்கான ஏறத்தாள ரூபா 125,000/= பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனை போல மேலும் சில விடயங்களிலும் முறைகேடான விதத்தில் செயற்பட்டு அவற்றை மூடி மறைக்க தனது சொந்த பணத்தை கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.