பயணிகளை ஏற்றும் முச்சக்கரவண்டியில் உணவுப் பாதுகாப்பற்ற முறையில் பாண் விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கும் வெதுப்பக உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கும் எதிராக இன்று மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையின் போது 41ஆயிரம் ரூபா நீதிமன்றத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது,
ஈச்சங்குளம், நொச்சிமோட்டை, ஓமந்தைப்பகுதிகளில் பொதுசுகாதாரப் பரிசோதகர்களின் வழமையான நடவடிக்கையின் போது நேற்று சுகாதாரமற்ற முறையிலும் உணவு பாதுகாப்பற்ற முறையிலும் பாண் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு எதிராகவும், வெதுப்பக உற்பத்தி நிலைய உரிமையாளருக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 41ஆயிரம் ரூபா நீதிமன்றத்தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
பயணம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தும் முச்சக்கர வண்டியில் கடதாசிப் பெட்டியிலும், ஆசனத்திலும் பாண், பணிஸ், கேக் போன்ற உணவுப் பொருட்களை கிராமங்களுக்குச் சென்று விற்பனையின் போது தூசு படுகின்ற சந்தர்ப்பங்களிலும் அதிக கால அவசாகம் திகதியிடப்பட்டு பணிஸ் 4 நாட்கள் திகதியிடப்பட்டு நேற்று தயாரிக்கப்பட்ட பணிசுக்கு இன்றைய திகதியிடப்பட்டு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டு, மருத்துவப்பரிசோதனை இன்றி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிரி ஒருவருக்கு நான்கு குற்றச்சாட்டுக்களும் மற்றைய எதிரிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் வெதுப்பக உரிமையாளருக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் மன்றில் முன்வைக்கப்பட்டபோது குற்றத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு 41ஆயிரம் ரூபா தண்டப்பணமாக நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு மோட்டார் சைக்கிளில் பாண் விற்பனையில் ஈடுபட்டவர் உட்பட பலருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பிற்காக எதிர்வரும் 26. ஆம் திகதி வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முச்சக்கரவண்டி திருத்தல் மருத்துவசான்றிதழ் பெறுவதற்காக தவணை வழங்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றில் கண்ணாடிப்பிற்றிங்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் வெயிலுக்கு உருகி பாணுடன் ஒட்டி விற்பனை செய்தவருக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெதுப்பக உற்பத்தி உரிமையாளர்களும் உணவுப் பொருட்களை முச்சக்கரவண்டியில் விற்பனை செய்பவர்களும் தமது முச்சக்கரவண்டியை நல்ல நிலையில் உணவுப்பாவனைக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் வைத்திருப்பது அவசியம். இந் நடைமுறையை பின்பற்றுமாறு ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க.சிரவஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.






