கொழும்பிலிருந்து யாழ். சென்ற சொகுசு பேருந்திற்கு ஏற்பட்ட நிலை! ஒருவர் பலி – பலர் படுகாயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஏ-9 வீதியின் மாங்குளம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சாரதியின் உதவியாளர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த மூன்று பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

தரித்து நின்ற டிப்பர் வாகனமொன்றுடன் மோதியே பேருந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது. இதேவேளை அதிக வேகமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

விபத்தில் சிக்கிய பயணிகள் சம்பவம் தொடர்பில் கூறுகையில்,

சாரதி வவுனியா பகுதியில் வைத்து பேருந்தை மோசமாக திருப்பியதை அவதானித்தோம். அதன் பின்னர் அவர்கள் சத்தமாக சிரித்து கதைத்தனர். அதிக வேகமாக வாகனத்தை செலுத்தினர்.

பேருந்து வீதியில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. டிப்பர் வாகனமானது வீதியின் மறு பக்கத்திலுள்ள சிறு பற்றைக்குள் சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.