50 இலட்சம் பணத்துடன் பேஸ்புக் காதலி ஓட்டம்; ஜேர்மனியிலிருந்து வந்த காதலன் முறைப்பாடு: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் முகநூல் காதலியை நம்பி 50 இலட்சம் ரூபாவை இழந்துள்ளார் ஒருவர்.

இருபாலையை சேர்ந்த கமலநாதன் (60 வயது) என்பவர் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகிறார்.

அவருக்கு முகநூல் ஊடாக யுவதியொருவரின் அறிமுகம் ஏற்பட்டது. சாதாரணமாக ஆரம்பித்த நட்பு, பின்னர் காதலாகியது. முகநூலில் இருவரும் நன்றாக கடலை போட்டு, திருமணம் செய்வதாக நிச்சயமித்தனர்.

குறித்த யுவதி தன்னை வவுனியாவை சேர்ந்தவர் என்றே அறிமுகப்படுத்தினார்.

இருவரும் திருமணம் செய்ய நிச்சயித்ததையடுத்து, ஜேர்மன் வாசி யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

மாப்பிள்ளை இருபாலைக்கு வந்ததையடுத்து, பேஸ்புக் காதலியும் இருபாலைக்கு வந்தார். மணப்பெண்ணின் வங்கி கணக்கில் 15 இலட்சம் ரூபாவை, கமலநாதன் வைப்பிலிட்டார்.

சுமார் 35 இலட்சம் செலவில் தாலி, விலையுயர்ந்த கையடக்க தொலைபேசி, நகைகள் என்பவற்றை கொள்வனவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று, அனைத்தையும் சுருட்டிக் கொண்டு முகநூல் காதலி கம்பி நீட்டி விட்டார்.

இது குறித்து, காதலன் கமலநாதன் கோப்பாய் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். நம்பிக்கைத்துரோகம் என்ற அடிப்படையில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.