யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய ஐந்து சந்தேக நபர்கள் நேற்றைய தினம் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய நிலையிலேயே இவர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த நால்வரும் அராலியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொன்னாலையில் தொடர்ந்து கற்றாளைகள் பிடுங்கிச் செல்லப்படும் நிலையில், ஏற்கனவே சில தரப்பினர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். கடந்த வாரம் வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, அராலி வட்டார உறுப்பினர் எஸ்.இலங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரி உதவியுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நால்வரை மடக்கிப் பிடித்து கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் மேற்படி இரு பெண்கள் உட்பட ஐவர் கற்றாளைகளைப் பிடுங்கியதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசா வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்கள் பிடுங்கிய கற்றாளைகளும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதிசிறந்த மூலிகை எனப்படும் கற்றாளை யாழ்ப்பாணத்தின் பல வறண்ட பிரதேசங்களில் அதிகமாகவே பரந்து காணப்படுவதுடன் பொன்னாலை உள்ளிட்ட வலி மேற்கு பிரதேசங்களில் காடுபோல் கூடுதலாக காணப்பட்டு வந்தது.

அண்மைய ஆண்டுகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் அவற்றைக் களவாக பிடுங்கிச் சென்றுள்ளதனால் கற்றாளைகளின் பரம்பல் வெகுவாகவே குறைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த கற்றாளைத் திருட்டு தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் மாவட்டத்திலுள்ள அரிய பொக்கிஷமான இந்த கற்றாளை வளத்தினை முறையான பாவனைக்குட்படுத்தவல்ல நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






