பொள்ளாச்சி ஜெயராமன் மீது கிரிமினல் வழக்கு தொடர்வோம்: சபரீசன் தரப்பு அதிரடி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரமே தற்போது தமிழகத்தின் சமூக – அரசியல் அரங்கை அதிரச்செய்துகொண்டிருக்கிறது. சுமார் ஏழாண்டுகளுக்கும் மேலாக பள்ளி – கல்லூரி மாணவிகளை ஏமாற்றி தவறாக பயன்படுத்தி ஆபாச விடீயோக்கள் எடுத்து அவர்களை மிரட்டிக்கொண்டிருந்த ஒரு கும்பல் குறித்த செய்திகள் வெளியான தினம் முதலே தமிழகம் உட்சபட்ச கொதிநிலையை அடைந்துள்ளது.

பொள்ளாச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற விஷமிகள் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களை நட்பாக பழகி தனியே வரவைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து அச்சுறுத்தி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேற்காண் நால்வரின் மீதும் குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமனின் மகன்களுக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தனது குடும்பத்தாருக்கு தொடர்பிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தரப்பினரே தங்களது ஆதரவு ஊடகங்கள் மூலம் செய்தி வெளியிடுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் ஜெயராமன்.

அதேபோல் காவல்துறையிலும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், “சபரீசன் தரப்பிலிருந்து பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஓர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், எதிர்வரும் நான்கு நாட்களுக்குள்ளாக சபரீசன் குறித்து ஜெயராமன் கூறியதை திரும்ப பெற வேண்டும். பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like