பயங்கரவாதியின் துப்பாக்கியில் என்ன எழுதப்பட்டிருந்தது தெரியுமா? அதிரவைக்கும் வரலாற்றுப் பின்புலம்!

நியூசிலாந்தில் 49 அப்பாவி மக்களை ஒரே தடவையில் கொன்ற, Brenton Tarrant எனும் தீவிரவாதி பயன்படுத்திய துப்பாக்கியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற கேள்வி பலரிடையே ஏற்பட்டிருந்தது.

ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்த இந்த துப்பாக்கி பார்ப்பதற்கு புதுவிதமாகவே இருந்துள்ளது. கறுப்பு பின்புலத்தில் வெள்ளை நிற எழுத்துக்கள் இருந்தமை ஆரம்பத்தில் இவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவராக இருக்குமா என சந்தேகப்படவைத்தது.

ஆனாலும் அந்த துப்பாக்கியில் எழுதப்பட்ட சொற்களுக்கான விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முதலாவதாக துப்பாக்கியின் உதைப்பு தாங்கியில் எழுதப்பட்டிருந்த Anton Lundin Pettersson என்ற பெயரானது, சுவீடன் நாட்டின் இளம் திவிரவாத மாணவன் ஒருவனைக் குறிக்கிறது. இவன் 2015ஆம் ஆண்டு சுவீடனில் குடியேறிய இரண்டு சிறுவர்களையும் இரண்டு ஆசிரியர்களையும் வாளால் வெட்டிக் கொன்றான். அவனால் கொல்லப்பட்டவர்கள் ஈராக் மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த முஸ்லிம்களாவர். பின்னர் சுவீடன் பொலிஸ் அவனைச் சுட்டுக்கொன்றது.

அடுத்து Alexandre Bissonnette எனும் நபர் 2017ஆம் ஆண்டு கனடாவில் நடத்திய பயங்கரவாத தாக்குதலைக் குறிக்கின்றது. கனடாவிலுள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கனவுக்கு புலம்பெயர்ந்திருந்த ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 19 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தபோதும் கொலையாளி அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றால் பயங்கரவாத சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படவில்லை. ஆனாலும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன் நாற்பது ஆண்டுகளுக்கு எந்தவித பிணையிலும் வெளியில் வரமுடியாது என அறிவித்தது.

அடுத்ததாக Skanderbeg எனும் பெயர். இது 15ஆம் நூற்றாண்டில் அல்பேனியாவில் நடத்த உதுமானியக் (Ottoman) கிளர்ச்சிக்கு எதிரான இராணுவத் தளபதியாக செயற்பட்டவரின் பெயரைக் குறிக்கிறது. உதுமானிய முஸ்லிம் கிளர்சியாளர்களை ஒடுக்கி கிறிஸ்தவர்களின் ஆட்சி முறையினை நிறுவியர் என வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. மேலும் அல்பேனியர்களின் இருப்புக்கு முக்கியமான காரணகர்த்தாக இவர் விளங்கியதால் பல கிறிஸ்தவர்களின் முன்மாதிரியான ஒரு தளபதியாக ஸ்கெண்டெர்பெக் விளங்குகிறார். நியூசிலாந்து பள்ளிவாசலில் ஈடுபட்ட பயங்கரவாதி இவரது பெயரைப் பயன்படுத்தியமை மதம் என்ற ரீதியில் கருதப்படுகிறது.

துப்பாக்கியின் ரவை அறை எனப்படும் மகஸினில் எழுதப்பட்டிருந்த பெயர்தான் Antonio Bragadin என்பதாகும். வெனிஸ் குடியரசின் சட்டவாளராகவும் இராணுவ அதிகாரியாகவுமிருந்த இவர் கிறிஸ்தவர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றவராவார். 16ஆம் நூற்றாண்டில் உதுமானியப் பேரரசின் படைகளுக்கெதிரான போரில் இவரது பங்களிப்பு காத்திரமானதாக கருதப்பட்டது.

எவ்வாறாயினும் 1571ஆம் ஆண்டு மீண்டும் வெனிஸ் நகரம் உதுமானியர்களால் மீட்கப்பட்டபோது அவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரின் வீழ்ச்சிக்குப் பின்னர் வந்த மூன்று நூற்றாண்டுகளிலும் மத்தியதரைக் கடல் தீவுகளில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக பயங்கரவாதி பயன்படுத்திய துப்பாக்கியின் குண்டுபோக்கும் குழல் பகுதியில் எழுதப்பட்டிருந்த Charles Martel எனும் பெயர் கவனத்திற்குரியது. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் உரோமர்களின் இராணுவ போர்வீரராக கருதப்படுகிறார். பிரான்சியாவின் எழுச்சிக்கு வித்திட்டவராக கருதப்படும் இவர் ஸ்பானியாவிலிருந்து வந்த முஸ்லிம் படைகளைத் தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

அடுத்ததாக முக்கியமான ஒரு ஆண்டு குறிப்பிடப்பட்டிருந்தது. 1683 எனும் அந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் போரியல் வரலாற்றிலே மிகப்பெரிய திருப்புமினையாக அமைந்திருந்தது. 1683ஆம் ஆண்டு உதுமானியர்களுக்கு எதிரான வியன்னா போர் நடந்தது. இரண்டு மாதங்களாக உதுமானியர்கள் எனப்படும் ஓட்டோமான்களுக்கு எதிரான இந்த முற்றுகை தொடர்ந்து பாரிய யுத்தமாக மாறியது.

இந்த போரானது ஹப்ஸ்வேர்க் முடியாட்சி மற்றும் புனித உரோம சாம்ராஜ்ஜியத்தின் பேரரசர் John III Sobieski தலைமையிலான போலந்து-லித்துவேனிய பொதுனலவாயம் ஆகிய தரப்புக்களால் ஓட்டோமான்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது. 1699வரை நடந்த இந்த போரானது இஸ்லாமியர்களை ஐரோப்பாவில் ஒடுக்குவதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இதனடிப்படையில் நியூசிலாந்து பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளி இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது தீவிர கடும்போக்குவாதத்தை மிக ஆழமான வரலாற்றுப் பகைமை மனப்பாங்குடன்கொண்டிருந்தார் என்பதைக் காணக்கிடைக்கின்றது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கிறிஸ்தவர்களின் போராட்டங்களும் தாக்குதலும் Brenton Tarrant எனும் அந்த பயங்கரவாதியை வெகுவாகவே ஈர்த்திருந்தமை அவதானிக்கமுடிகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான கிறிஸ்தவர்களின் தாக்குதல் வரலாற்றில் அடுத்ததாக தானும் இடம்பிடிக்கவேண்டும் என்ற அதிமோசமான இனவெறி மற்றும் மதவெறி அவரை வெகுவாகவே பாதித்திருந்தமை இதிலிருந்து புலனாகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like