உலகை அதிர்ச்சி கொள்ளவைத்த விமானம் விழுந்து தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

எதியோப்பிய விமானம் விழுந்து நொருங்கி உலகை அதிர்ச்சிகொள்ளவைத்து இன்றுடன் ஒரு வாரம் ஆகின்ற நிலையில் விபத்து தொடர்பான புதிய புதிய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதன்படி குறித்த விமானத்தின் தலைமை வானோடியான Yared Mulugeta Getachew விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் மிகுந்த பதற்றத்துடனும் பயத்துடனும் கட்டுப்பாட்டு அறையுடன் உரையாடியதாக தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக விமானம் புறப்பட்ட உடனேயே கட்டுக்கடங்காத வேகத்தில் பயணிப்பதால் அதனை உடனடியாக இன்னும் மேலே எழுப்புவதற்கான அனுமதியினை அவசரமாக கோரியிருக்கிறார். அதாவது கடல் மட்டத்திலிருந்து உடனடியாகவே 14000 அடிகளுக்கு மேலுயர்த்தி மீண்டும் விமான நிலையத்திற்குத் திருப்புவதற்கான அனுமதியினைக் கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து விமானம் விமான நிலையத்தை நோக்கி வலப்பக்கமாக திருப்பப்பட்டது.

10,800 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த விமானம் வலதுபக்கம் திரும்பியதும் கட்டுப்பாட்டு அறையின் ராடார் திரையிலிருந்து மறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன்பின்னரே அந்த பேரனர்த்தம் இடம்பெற்றது.

இந்த ரகசியங்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்த நபரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகவும் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதால் அவர் குறித்த தகவல் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பதற்றத்துடன் கட்டுப்பாட்டு அறையிடம் பேசிய தலைமை விமானி மிகுந்த திறமையான வானோடி என்றும் அவர் இதுவரை 8000 மணித்தியாலங்கள்வரை பறந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

விமானியையும் மீறி நடந்த அந்த பேரனர்த்தமானது கண்டிப்பாக விமான தயாரிப்பின் மிகப்பெரிய தவறாகவே இருக்கமுடியும் என நம்பப்படுகிறது.