பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரிய தமிழ் ஈழம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும், ஆகவே பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் கோவை நல்லம்பாளையம் பகுதியை சார்ந்த இரு சகோதரிகள்.

பொள்ளாச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற விஷமிகள் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களை நட்பாக பழகி தனியே வரவைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து அச்சுறுத்தி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேற்காண் நால்வரின் மீதும் குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமனின் மகன்களுக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை நல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த சாந்தகுமாரின் இரு மகள்களான தமிழ் ஈழம் மற்றும் ஓவியா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்கள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும், ஆகவே பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக்கொள்ள இளம்பெண்கள் அனுமதி கோரிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.