கண்டியில் பூட்டிய அறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண ஆசிரியர்; பின்னணியில் நடந்த மர்மம் என்ன?

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.ஜெகசுதன் எனும் ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்பிருந்து கண்டியில் உள்ள முஸ்லீம் மகாவித்தியாலயம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் பாடசாலைக்கு வராததால் அவரின் நண்பரான மன்னாரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவரை தேடி அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பாடசாலை சமூகத்துக்கு தகவல் அறிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளின் பின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர், சடலம் தற்போது யாழுக்கு கொண்டு செல்லப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த சக ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கிலிருக்கும் எங்களை வேலை வழங்கிய கையுடன் தூர தேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து விடுகிறார்கள், அங்கு சென்று பார்த்தால் அடிப்படை வசதிகள் இல்லாத பாடசாலை விடுதிகள் காணப்படும், வேறு வழியின்றி பாடசாலை அயல் பகுதிகளில் கிடைத்த அறைகளில் தனியாக தங்கியிருக்கும் போது, நெஞ்சடைப்பு வந்தாலோ, ஏதாவது அவசர நிலையின் போதோ யாருடைய உதவிகளும் கிடைக்காது, அப்படித்தான் இந்த குறித்த ஆசிரியரும் இருந்திருப்பார், இதே நிலைதான் நாளை எங்களுக்கும் என துயரமாக தெரிவித்தனர்.

அரச நியமனங்கள் வழங்கும் போது சொந்த மாகாணங்களில் வழங்காமல் அவர்களை துர தேசங்களில் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கும் அரசு, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறுகின்றது என்பதை இப்படியான சம்பவங்கள் மூலம் இந்த நாடு அறிந்து வைத்திருக்கின்றது, எனவே இனிவரும் காலங்களில் மாகாணங்கள் ரீதியாக இடம்மாற்றப்படும் அரச ஊழியர்களின் பாதுகாப்பில் அரசாங்கம் துரித கவனம் செலுத்த வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.