உடுவில் மகளிர் கல்லூரி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்! அதிபர் கவலை

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவி பாடசாலை விடுதியில் இருந்து வெளியேறியமை தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்தியை சில ஊடகங்கள் பிரசுரித்தமையையிட்டு மனம் வருந்துவதாக கல்லூரி அதிபர் பி.எஸ்.ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.

மகளிர் கல்லூரி தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

அதாவது எனது பாடசாலை விடுதியில் இருந்து வெளியேறிய மாணவி நேற்று பரீட்சை நடைபெறவுள்ளதால் அதனை தவிர்த்து கொள்ளும் முகமாக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த மாணவி மருத்துவக் காரணத்திற்காக விடுமுறையில் வீட்டில் நின்று மீண்டும் புதன்கிழமை அவரின் பெற்றோரால் விடுதிக்கு அழைத்து வரப்பட்டார். பாடசாலை நுழைவாயிலில் வரும் போதே மாணவி வீடு செல்ல எத்தனித்துள்ளார்.

ஆயினும் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மீண்டும் விடுதியில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு பின்னரே அவர் விடுதியை விட்டுத் தவறான முறையில் வெளியேறியிருந்தார்.

இருப்பினும் நாம் முறைப்படி அவரைப் பொறுப்பேற்று ஒழுங்கான விதிமுறைகளின்படி அவரின் தாயாரிடம் ஒரு கடிதத்தைப் பெற்று மீண்டும் தாயாரிடமே மாணவியை ஒப்படைத்தோம்.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான செய்திகள் அம் மாணவியின் எதிர்காலத்திற்கும் படிப்பிற்கும் பாரிய பின்னடைவாக அமையும் என்பதுடன் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கும் நன்மதிப்பிற்கும் பங்கம் விளைவிற்கும் என்பதை மிகவும் வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

மேற்படி விடயத்தைக் கருத்திற்கொண்டு உண்மை நிலவரத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.