சர்வாதிகாரி மோடி.. உதவாக்கரை எடப்பாடி: விளாசும் மு.க ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடி ஓர் சர்வாதிகாரி எனவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் உதவாக்கரை எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்.

எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்காவும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சார களத்தில் இறங்கிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின், நேற்றைய தினம் பெரம்பலூர் தொகுதி முசிறியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அங்கு திமுக கூட்டணியில் போட்டியிடும் பச்சமுத்து என்ற பாரிவேந்தருக்கு ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் பேசிய அவர், ‘மத்தியில் உள்ள சர்வாதிகாரி மோடியும், மாநிலத்தில் உள்ள உதவாக்கரை எடப்பாடியும் இன்றைக்கு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் தவறான மனிதர்கள். சசிகலாவின் கால்களை பிடித்து முதல்வரான எடப்பாடி இன்று பிரதமர் மோடியின் கைகளை கால்களாக நினைத்து பிடித்துக்கொண்டு ஜால்ரா அடிக்கிறார். மத்தியில் உள்ளவர்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க பார்க்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்களே கருப்பு பணத்தை மீட்டெடுத்தார்களா?’ என பிரதமர் மோடியையும், முதல்வர் பழனிசாமியையும் மிக கடுமையாக சாடி பேசினார்.

முன்னதாக, பிரதமர் மோடியை நாசிஸ்ட் – பாசிஸ்ட் என தொடர்ச்சியாக காட்டமாக விமர்சித்துவரக்கூடிய பிராந்திய கட்சியின் தலைவர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.