மக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர்

மக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர்
பொன்னாவளை, களபூமி, காரைநகர்
(முதலாவது ஆண்டு நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வரையப்படுகின்றது)

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”

இது வள்ளுவர் தந்த திருக்குறளாகும். எவரொவர் இப்பூவுலகில் பிறந்து மற்றவர்கள் வாழ வேண்டுமென்பதற்காகத் தன்னையே அர்ப்பணித்துச் சேவை புரிகிறாரோ அவரை இறைவனாகவோ அல்லது இறைதூதராகவோ கருதும் நிலை தோன்றுகின்றது.

இந்த வகையில் உற்று நோக்கும் போது களபூமி எனும் கிராமத்தின் கல்வி மற்றும் புகழ் மேன்மையடைய வேண்டும் எனும் நோக்கில் திக்கரை மற்றும் நந்தாவில் பகுதிகளில் பாலர் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்திய பாக்கியம் ரீச்சரின் தன்னலமற்ற சேவையையும் கருத இடமுண்டு. துள்ளித்திரிந்த அப்பகுதிச் சிறார்களின் துடுக்கடக்கி அவர்கள் எல்லோரையும் ஒரு நிலைப்படுத்தி கற்க வைத்த பெருமை இவரையே சாரும். இதனை செய்வது மிகமிகக் கஷ்டம் என்பதை எல்லோரும் அறிவர். இருந்தும் அதனையும் தாங்கிக் கொண்டு சேவையாகச் செய்த பாக்கியம் ரீச்சரைப் போற்றாமல் இருக்க முடியாது.

ஈழவள நாட்டின் வடபால் இலங்கிடும் யாழ் நகரின் அருகே ஈடிணையில்லாது துலங்கிடும் நன்நகராம் காரைநகர் எனும் பதிதனிலே காராளர், கல்வியாளர்கள், கச்சிதமான வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் போன்ற பல்துறை பரிணம வளர்ச்சியுடன் பலரும் மெச்சிட வாழ்ந்து வரும் எமமூரில் ஈழத்துச் சிதம்பரனார் சிவநடனம் புரிய, திக்கரை முருகன், தெருவடிப் பிள்ளையார் அருளாட்சி புரிய ஆலயங்களின் மணியோசையின் நாதம் இதமாக ஒலிக்கும் களபூமி, பொன்னாவளைக் குறிச்சியில் வாழ்ந்த கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளாகப் பாக்கியம் ரீச்சர் 11.04.1957ல் பிறந்தார்.

இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்த காரணத்தினால் தாயாரின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு அக்காவும் உடன் பிறந்தவராவர். கணவனை இழந்த கைம்பெண்ணான் இவரின் தாயார் இரு பெண் குழந்தைகளையும் பாசத்தோடு வளர்க்கலானார்.

பள்ளிப்பருவம் எய்திய பாக்கியம் ரீச்சர் தனது ஆரம்பக்கல்வியைக் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திலும், மேற்படிப்பை வலந்தலையில் உள்ள காரைநகர் இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்தார். அங்கு க.பொ.த (சாதாரண) பரீட்சையில் சித்தியடைந்ததும் (Nursary Training) பாலர் பாடசாலை நடாத்துவதற்கான பயிற்சி வகுப்புக்களில் படித்து சித்தியும் பெற்றார்.

இதனை தொடர்ந்து 1970 களின் ஆரம்பத்தில் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தின் வடகிழக்குப் பக்கமாக அமைந்த கட்டடத்தில் சிறுவர் பாடசாலையை ஆரம்பித்தார். இப்பாடசாலை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தது. இவரின் கற்பித்தல் முறையையும், திறமையையும் கண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து இவரது பாடசாலையில் சேர்த்தனர். மாணவர் தொகை அதிகரித்த போதிலும் இவரது கற்பித்தல் முறையில் எவ்வித மாற்றமுமின்றி திறமையாகக் கற்பித்து வந்தார்.

இவ்வாறு வகுப்புக்களை நடாத்திவரும் வேளையில் களபூமியில் உள்ள விளானை, நந்தாவில் குறிச்சிகளில் வாழ்ந்த பெற்றோரின் வேண்டுகோளின் பேரில் இன்னொரு சிறுவர் பாடசாலையை அப்பகுதியில் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் பாக்கியம் ரீச்சருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகப் பாக்கியம் ரீச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க 1978ம் ஆண்டு களபூமி நந்தாவிலைச் சேர்ந்த பொன்னம்பலம் சதாசிவம் (VPS) அவர்களின் இரண்டாவது மகனான தேவராசா வீட்டில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பத்துப்பிள்ளைகளுடன் ஆரம்பமான இப்பாடசாலையில் நாளடைவில் 25க்கும் மேற்பட்ட சிறார்கள் கல்விகற்றனர். இதனால் திக்கரைப் பாடசாலையைக் காலையிலும், நந்தாவில் பாடசாலையை மாலையிலும் நடாத்தி வந்தார்.

இப்பாடசாலையில் கல்வி கற்ற சிறார்களில் பலர் வீட்டில் இருந்து வரும் பொழுது முரண்டு பிடித்துக் கொண்ட வந்தாலும் பாக்கியம் ரீச்சரைக் கண்டதும் மகுடி வாசிப்புக்கு அடங்கிய பாம்பைப் போல அடங்கி விடுவார்கள். இது ஆசிரியரின் சாமர்த்தியத்தை வெளிப்படுத்துகின்றது. அவர்கள் எல்லோரையும் நல்வழிப்படுத்தி கல்வியிலும், விளையாட்டுகளிலும் திறமை பெற்றவர்களாக துலங்க வைத்த பெருமையெல்லாம் பாக்கியம் ரீச்சரைச் சாரும். ஒரு இல்லம் சிறந்த முறையில் பலம்மிக்கதாக அமைய வேண்டுமானால் அதன் அத்திவாரம் பலம் மிக்கதாக இருத்தல் அவசியமாகின்றது. அதே போலத்தான் கல்வியில் ஒரு மாணவன் சிறந்து விளங்க வேண்டுமானால் அவனுக்கு பாலர் பாடசாலைக் கல்வி சிறப்புமிக்கதாக அமைய வேண்டியது கட்டாயமாகும். அப்படிப்பட்ட சிறந்த கல்வியை ஊட்டியவர் இவரே.

காரைநகர் வாரிவளவு நல்லியக்கச் சபை மூலம் எல்லோராலும் பட்டுமாமா என அழைக்கப்படும் சரவணமுத்து பத்மநாதன் அவர்களால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் தவறாது ஒவ்வொரு ஆண்டும் தனது சிறார்களை பங்குகொள்ள வைத்தது மட்டுமன்றி ஏனைய சிறுவர் பாடசாலைகளுடன் போட்டியிடவைத்து ஆகக் கூடிய பரிசில்களைச் சிறார்களுக்குப் பெற்றுக் கொடுத்த பெருமையும் இவரையே சாரும்.

இஃது இவ்வாறிக்கத் திருமணப் பருவம் எய்திய தனது இராண்டாவது மகளான பாக்கியம் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய தாயார் காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் மகனான நடராஜா அவர்களைத் திருமணம் செய்துவைத்தனர்.

பாக்கியம் நடராசா ஆகியோரின் இல்லறம் நல்லறமாக நடைபெற்றதன் பயனாக குகராஜ், ஆனந்தராஜ், கோகுலராஜ், சண்முகராஜ் ஆகிய நான்கு மழலைச் செல்வங்களைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைகளுக்குப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து பள்ளிக்கும் அனுப்பிக் கல்வியில் சிறக்கவைத்தார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இவர் குடும்பத்துடன் காரைநகரை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் குருநாதர் ஒழுங்கையில் வசிக்கலானார். எவரையும் இன்முகம் காட்டி வரவேற்கும் பாங்குடையவர் பாக்கியம் ரீச்சர். அதே நேரம் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்கள் இடத்திலும் சரி பெற்ற பிள்ளைகளிடத்திலும் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் இவர் இரக்க சிந்தையும் படைத்தவர். இவரிடம் கல்வி கற்றவர்கள் பாக்கியசாலிகள் என்றே கூறவேண்டும். இவர்களில் பலர் வெளிநாடுகளில் சீரும் சிறப்புமாக வாழ்க்கை நடாத்தி வருவதுடன் இன்னும் பலர் உயர் பதவிகளிலும் காணப்படுகின்றனர்.

அத்துடன் அவரின் மாணவர் திருமணம் முடித்து மனைவி பிள்ளைகளுடன் செல்லும் பொழுது கூட குருபக்தியை மறவாது அவருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துவதையும், ஆசிரியர் சில மாணவர்களின் திருமணங்களில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தியதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்த மாணவரும் வாழ்வில் உயர் நிலையில் இருப்பதைப் பார்த்து பெற்றோர்களுடன் சேர்ந்து ஆசிரியரும் ஆனந்தப் பரவசம் அடைகின்றனர். இது பாக்கியம் ரீச்சருக்கும் சாலப் பொருந்தும். இங்கே மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதன் பொருள் தெளிவாக உணர்த்தப்படுகின்றது. பாக்கியம் ரீச்சர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பெற்றோர் பூரண ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருந்த அதே வேளை ஆசிரியர் பெற்றோர் உறவும்; வலுப் பெற்றிருந்தது.

இவ்வாறு நன்றாக வாழ்ந்து வந்த பாக்கியம் ரீச்சர் குடும்பத்தில் சூறாவளி வீச ஆரம்பித்தது. நோய் வாய்ப்பட்டிருந்த பாக்கியம் ரீச்சர் கடந்த 28.03.2018ல் இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவையிட்டு துயருறும் உள்ளங்களுடன் இணைந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல திக்கரை முருகன் அருள் வேண்டிப் பிரார்த்திப்போமாக!

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

தம்பையா நடராசா
நந்தாவில், களபூமி
காரைநகர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like