சர்வாதிகாரியாக மாறிய ரணில்

ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரி அல்ல, அவர் சர்வாதிகாரி என்ற எண்ணத்தை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரை வாங்கிகொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரே உண்மையான சர்வதிகார ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றார். எமது ஆட்சியில் கடன் வாங்கியதாகவும் அதுவே நாட்டினை நாசமாக்கியுள்ளது எனவும் ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது.

மகிந்த ராஜபக்ச கடன் வாங்கினார். ஆனால் அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

நீங்களும் கடன்களை பெற்றீர்கள். ஆனால் வேலைத்திட்டங்கள் என்ன நடந்துள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எங்கே? அந்த பணம் என்னவானது கடன்களை குறைக்க வேறு கடன்களை வாங்கினால் நாட்டின் கடன் தொகை குறையாது. அவ்வாறே உள்ளதே. ஆகவே ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆட்சியில் நாட்டினை அபிவிருத்தி செய்யவில்லை.

இதேவேளை, வடக்குக்கு தேர்தலை நடத்தாமைக்கான எந்த எதிர்ப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்தாது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.