தி.மு.க வேட்பாளர் இலங்கையில் 26,000 கோடி முதலீடு!? ஆட்டம் கண்ட தி.மு.க தலைமை

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இலங்கையில் எரூ.26,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பா.ம.க-வின் முன்னாள் ரயில்வே இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி களமிறக்கப்பட்டுள்ளார். இந்த இருவருமே அங்கு நன்கு பரிட்சயமானவர்கள் என்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

தேர்தலைப் பொறுத்தவரையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட அளவே சொத்து மதிப்பு இருக்க வேண்டும் என்ற விதியும் உண்டு.

இந்நிலையில் ஜெகத் ரட்சகனின் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் (தோராயமாக ரூ.26000 கோடி) அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் அண்மையில் அறிவித்தது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் தேசிய ஒழுங்குமுறை கணக்கு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனம் ஆகும்.

இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இந்த செய்தி நல்ல தேர்தல் பிரச்சாரமாக மாறியுள்ளது. திமுகவை சேர்ந்த வேட்பாளரின் இலங்கை முதலீடே இத்தனை கோடி என்றால், திமுக தலைவரின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெகத்ரட்சகன், முதலீடானது ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. எங்கள் சொந்த நிறுவனம் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை. இதை தேவையில்லாமல் பெரிதாக்கியுள்ளனர் என்று விளக்கமளித்துள்ளார்.