அமைச்சராகிறார் டக்ளஸ்?? தடுமாறும் கூட்டமைப்பு!! ரணிலின் ஆட்டம் ஆரம்பம்..

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, அமைச்சரவையை விஸ்தரிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க, ஈ.பி.டி.பிக்கு வலைவீசியுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுக்களை, ரணில் விக்கிரமசிங்க நேரடியாகவே ஈ.பி.டி.பியுடன் ஆரம்பித்துள்ளார் என்ற தகவலை தமிழ்பக்கம் அறிந்தது.

சுதந்திரக்கட்சியிலுமுள்ள சிலரை இணைத்து, ஐ.தே.கவிலும் அதிருப்தியிலுள்ள சிலருடன் அமைச்சரவையை விஸ்தரிக்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டுள்ளார்.

தேசிய அரசு அமைக்க சுதந்திரக்கட்சி மறுத்ததை தொடர்ந்து, முஸ்லிம் காங்கிரசின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரேயொரு எம்.பியான அலிசாஹிர் மௌலானாவுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கலாமா என ஐ.தே.க முயற்சித்தது.

எனினும், அதற்கு எதிர்ப்புக்கள் இருந்ததையடுத்து, ஈ.பி.டி.பியுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பது குறித்து ஐ.தே.க ஆலோசித்தது.

சில மாதங்களின் முன்னர் நடந்த பேச்சில், ஈ.பி.டி.பிக்கு ஒரு தொகை பணம் வழங்கலாமென ஐ.தே.க தெரிவித்திருந்தது. எனினும், வடக்கில் பணிபுரியக் கூடிய அமைச்சு பதவியொன்றை ஈ.பி.டி.பி நிபந்தனையாக வைத்திருந்தது.

எனினும், அரசின் உத்தியோகப்பற்றற்ற பங்காளிக்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை விரும்பாததால், அந்த பேச்சுக்கள் அப்பொழுதே முறிவடைந்திருந்தன.

எனினும் தேசிய அரசு அமைத்து, அமைச்சரவையை விஸ்தரித்தே தீர வேண்டிய நெருக்கடியிலுள்ள ஐ.தே.க தலைமை, மீண்டும் தேசிய அரசு பேச்சை ஈ.பி.டி.பியுடன் ஆரம்பித்துள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இதை பற்றி நேரடியாகவே பேசினார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எனினும், உடனடியாக பிடி கொடுக்காத டக்ளஸ் தேவானந்தா, கட்சிக்குள் கலந்துரையாட வேண்டும் என்றும், பின்னர் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடியே பதிலளிக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வாரஇறுதி நாட்களான நேற்றும், இன்றும் கொழும்பில் தங்கியிருக்கவில்லை.

நாளையே இருவரும் கொழும்பிற்கு வருவார்கள். நாளை மஹிந்த ராஜபக்சவும், டக்ளஸ் தேவானந்தாவும் சந்தித்து பேசலாமென தெரிகிறது.

நாளை அல்லது நாளை மறுநாள் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெறலாமென தெரிகிறது. இரண்டு சந்திப்புக்களின் பின்னரே, ஈ.பி.டி.பி தமது முடிவை தெரிவிக்கும்.

இதேவேளை, கடந்தமுறையை போன்ற நெருக்கடியே இம்முறையும் இரு தரப்பு பேச்சிற்கும் ஏற்படலாமென தெரிகிறது.

ஏனெனில், பணத்தை பெற்றுக்கொண்டு ஆதரவளிப்பதில்லை, வடக்கு தொடர்புடைய அமைச்சொன்றை நிபந்தனையாக இம்முறையும் வைக்க ஈ.பி.டி.பி தீர்மானித்துள்ளது. எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை விரும்பாது என்பதால், இம்முறையும் பேச்சு வெற்றியளிக்காதென்றே கருதப்படுகிறது.

இறுதியாக ஒரு கொசுறு தகவல்- இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70வது பிறந்தநாள். இன்று தொலைபேசியில் பிரதமரை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் டக்ளஸ். எனினும், இதன்போது தேசிய அரசைப்பற்றி எதுவும் பேசப்படவில்லையென தகவல்.