யாழ்ப்பாணத்தின் கிழக்கே நடைபெற்ற விடுதலைப் புலிகளின் பாரிய தரையிறக்கம்! ஆடிப்போன அமெரிக்காவின் கணிப்பு!

ஆனையிறவை அசைக்கமுடியாத ஒரு உறுதிவாய்ந்த பாதுகாப்பு அரண் என அறிந்ததனாலேயே ஒல்லாந்தர் அங்கு பஸ்கியூலா (bascula) என்ற கோட்டையைக் கட்டினார்கள். இதன் முக்கியத்துவம் ஆங்கிலேயராலும் கடைப்பிடிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தாலும் கடைப்பிடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் கடைப்பிடிக்கப்பட்டதென்றுதான் சொல்ல முடியும்.

பல குடாக்களையும் தீவுகளையும் கடலேரிகளையும் கொண்ட யாழ்ப்பாண தீபகற்பத்தை இலங்கைத் தீவின் பிரதான நிலத்திணிவோடு தரைவழியாக இணைத்த ஒரேயொரு மையம் ஆனையிறவுதான். உள்நாட்டு யுத்த நடவடிக்கைகளில் படை நகர்வுகளை ஸ்தம்பிக்கச்செய்யும் வல்லமையை இயல்பாகவே ஆனையிறவுக்கு கொடுத்திருக்கிறது இயற்கை.

வன்னியில் ஓயாத அலைகள் நடவடிக்கைகள்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் 1998 இல் கிளிநொச்சியையும் கைப்பற்றியதிலிருந்து அடுத்த இலக்காக இருந்தது ஆனையிறவு படைத்தளமே.

ஆனையிறவை விடுதலைப் புலிகள் தாக்குவார்கள் என்ற ஐயத்தில் அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சிய படைத்துறை வல்லுனர்களை இலங்கை அரசு ஆனையிறவுக்கு அழைத்து வந்தது. விடுதலைப் புலிகளின் தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்ளலாம்/முறியடிக்கலாம் என்பதை அறிவதற்காகவே அவர்களை அழைத்து வந்தது.

இதன்படி ஆனையிறவுக்கு வந்த அமெரிக்க படைத்துறை வல்லுநர்கள் ஒரே சொல்லில் “முடியாத விடயம்” என்று கூறிவிட்டார்கள்.

அதாவது, ”கொரில்லா போராளிக் குழுவான விடுதலைப் புலிகளால் ஒருபோதுமே ஆனையிறவை மீட்கமுடியாது. இதைக் கைப்பற்றவேண்டுமாயின் கடல் தரை ஆகாயம் என மும்முனையில் ஒருங்கிணைக்கப்பட்ட மரபுவழி இராணுவத் தாக்குதல் ஒன்றினால் மட்டுமே முடியும். முன்தளப் படையினரும் பின்தள எறிகணைகளும் எந்நேரமும் உசாராக இருந்தாலே போதுமானது” என்று ஆறுதலும் நம்பிக்கையும் கூறிவிட்டுச் சென்றது அந்த வெளிநாட்டு இராணுவ வல்லமை.

ஆனால் களத்தில் விடுதலைப் புலிகளை நேரடியாக எதிர்கொண்ட பட்டறிவில் சிறிலங்கா இராணுவம் அவர்களின் அந்த உறுதிமொழிக்கு செவிசாய்த்தார்களோ என்னமோ ஆனையிறவைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பை நிலைநிறுத்தியது. அவர்களின் கவனம் முழுக்க முன்தளத்தையே மையப்படுத்தியிருந்தது.

ஆனால் குடாரப்பு என்ற இடம் ஆனையிறவுக்கு வடகிழக்கு மூலையில் அமைந்திருந்தது. அங்கே ஒரு பாரிய தரையிறக்கம் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு ஆனையிறவின் பின்தளம் பலவீனமாக்கப்பட்டது. அதன் பின்னரான சண்டைகளே ஆனையிறவை விட்டு படையினர் உடுத்த பாதி உடுக்காத பாதியென ஓட்டமெடுத்ததற்கு காரணமாயின.

ஆனையிறவு மீட்பு என்பது வெறுமனே ஆனையிறவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கிடையாது. பல சண்டைகளின் பின்னரான இறுதி இலக்கே ஆனையிறவு. இதில் விடுதலைப் புலிகளின் மரபுவழி தாக்குதல் அணிகள் ஒன்றாக்கப்பட்ட சிறப்பு கமாண்டோ அணியே முக்கிய பங்காற்றியிருந்தது.

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியை முதன்மைப்படுத்தி ஏனைய படையணிகளிலிருந்து தேர்ந்தெடுத்த போராளிகளையும் கொண்டு இந்த சிறப்புக் கொமாண்டோ கட்டமைக்கப்பட்டது. இந்த தரையிறக்கத்தையும் நகர்வையும் இலகுவாக்கியதில் பளையில் அமைந்திருந்த படையினரின் ஆட்லறி உந்து செலுத்திகளை, ஊடுருவிச்சென்று செயலிழக்கவைத்த கரும்புலிகளின் சிறப்பு அணிக்கு பங்கிருக்கிறது.

இத்தாவில் பகுதியில் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையை தளபதி பால்ராஜ் தலைமையில் ஊடறுத்து நின்ற விடுதலைப் புலிகளின் சிறப்பு கமாண்டோ அணி ஒரு மாதகாலமாக அவ்விடத்தை தக்கவைத்து கடும் எதிர்ப்புச் சமர் புரிந்துகொண்டிருந்தது. வந்திருப்பது பால்ராஜ் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கிய யுத்தப் படையணிகள் என்பதை அறிந்த இராணுவம் மிக மூர்க்கத்தனமான தாக்குதல்களைத் தொடுத்தவண்ணமிருந்தது.

கிளிநொச்சியிலிருந்து பரந்தன்வரை விடுதலைப் புலிகளின் மற்றொரு அணி முன்னேறியது. இத்தாவிலில் நிலைகொண்டிருந்த சிறப்பு கமாண்டோ அணி இயக்கச்சியை கைப்பற்றிவதில் தீவிரம் காட்டியது. நெடுநாள் யுத்தகளம் கொடுத்த சோர்வு சிறப்பு கமாண்டோ அணியினை இயக்கச்சியைக் கைப்பற்றுவதில் தாமதப்படுத்தியது. இறுதியில் விடுதலைப் புலிகளின் மொத்தப் பலமும் சேர்ந்து இயக்கச்சியை உடைத்தது. அதனோடு ஆனையிறவும் புலிகள்வசம் வீழ்ந்தது.

ஆனையிறவு மீட்புச் சமரில் சிறப்பு கமாண்டோ அணியை குடாரப்பில் தரையிறக்கியதில் கடற்புலிகள் அணியினர் மிகப்பெரும் பங்களிப்பினை ஆற்றியிருந்தனர். கடலில் கடற்படையுடனான யுத்தத்தின் மத்தியிலும் அந்த சிறப்பு கமாண்டோ அணியை தமது அதிவேக ‘குருவி’ படகுகளில் பத்திரமாகத் தரையிறக்கினார்கள்!

ஒரு போராளிக்குழுவால் ஆனையிறவை ஒருபோதுமே மீட்கமுடியாதென இலங்கைப் படைத்துறைக்கு நம்பிக்கைவாக்கு கொடுத்துச்சென்ற அமெரிக்கப் படைத்துறை ஆனையிறவின் வீழ்ச்சி கண்டு விழி பிதுங்கி நின்றது!

அதன்பின்னர் இறுதிப்போரில் புலிகள் தாமாகவே சண்டையேதுமின்று விட்டுச்சென்ற ஆனையிறவை இடைப்பட்ட காலத்தில் சிறிலங்காப் படையினரால் இம்மியும் அசைத்துப் பார்க்க முடியவில்லை!

அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் விடுதலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளைப்பீடத்தால் நிர்மூலமாக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஈழப்போராட்ட காலக்கோட்டில் மிகப்பெரும் தாக்கங்களை உண்டுபண்ணிய ஆனையிறவின் வெற்றிக்கு அடித்தளமிட்ட குடாரப்பு தரையிறக்கம் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

1200 வரையிலான போராளிகளைக்கொண்ட சிறப்புக் கமாண்டோ அணி வடமராட்சி கிழக்கின் குடாரப்பு என்ற இடத்தில் தரையிறங்குவதற்காக வெற்றிலைக்கேணி கடலூடாக கடற்புலிகளால் பலமுனை எதிர்ப்புக்களின் மத்தியிலும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தரையிறக்கப்பட்ட அணிகள் தொண்டைமானாறு கடல் நீரேரியூடாக இத்தாவில் பகுதிக்கு முன்னேறி யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையில் நிலையெடுத்து ஆனையிறவில் நிலைகொண்டிருந்த இராணுவத்திற்கான வழங்கல் பாதையினை முடக்கினர்.

உலகம் வியந்து நோக்கிய ஆனையிறவு மீட்புச் சமருக்கு அடித்தளமிட்டது எதுவெனில், அது குடாரப்பு தரையிறக்கம்தான். அந்த தீரமிகு சரித்திரம் நிகழ்ந்து இன்றுடன் பத்தொன்பது ஆண்டுகள் கடந்து செல்கின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like