இந்தியா உண்மையில் ஒரு முதல்தர ஜனநாயக குடியரசா? படித்து பாருங்கள்!

இந்திய உலகின் முதல்தர நடைமுறை ஜனநாயகம் என கிலாகிக்கப்பட்டாலும், உள்ளார்ந்த ரீதியாக அது பெரும் கேள்வியாகவே உள்ளது. ஏன்? என்று கேட்டீர்களானால், பதில் அதிர்ச்சியாக இருக்கலாம். 2014 தேர்தலில் தெரிவான 543 பேரில், ஆய்விற்குட்படுத்தப்பட்ட 541 பாராளுமன்ற உறுப்பினர்களில் 34 சதவீதமானோர் மேல், அதாவது 186 பேர் மேல் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இது 2009 தேர்தலை விட அதிகமாகும். அதாவது 2009 தேர்தலில் 30 சதவீதமாகவும், 2004 இல் 24 சதவீதமாகவும் இருந்துள்ளது. அதாவது குற்றஞ்சாட்டப்பட்ட்வர்களின் பாராளுமன்ற எண்ணிக்கை தொடர்ந்தும் அபிர்தமாக அதிகரித்துச் செல்வதைக் காணலாம்.

சாதாரமாண ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெல்வதை விட, இவ்வாறு குற்றச்சாட்டப்பட்டவர்கள் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் மூன்று மடங்காக உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. இதுவே இந்தியத் தேர்தலில் அத்துமீறிய சீர்கேடுகள் அதிகரித்துச் செல்வதற்கான காரணமும் ஆகும்.

இதில் எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல. காங்கிரசை விட பி.ஜே.பி இவ்விடயத்தில் முன்னணியில் வேறு உள்ளது. இந்திய சட்டங்களின் படி ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அவர் சிறைத்தண்டனைக்கு உள்ளானாலே, அவர் பதவி பறிக்கப்படமுடியும். பல வழக்குகள் 30 ஆண்டுகள் கழிந்தும் நிலுவையில் உள்ளமை, இந்திய ஜனநாயகத்தின் இழிவுநிலையாகும்.

அதிலும் 76 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை, ஆட்கடத்தல், உடலியல் வன்முறை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றால், நம்புவீர்களா? இதைவிட அதிர்ச்சி என்னவென்றால் 31 சதவீத மத்திய அமைச்சர்களுக்கு எதிராகவும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தான்.

இதிலும் 18 சதவீத அமைச்சர்களுக்கு எதிரான பெண்களுக்கு எதிரான வன்முறை, கொலை முயற்சி போன்ற பாரதூரமான குற்றவியல் வழக்குகள் உள்ளன. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இந்நிலையில், மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமூலங்கள் மற்றும் முன்னெடுப்புகள் இவர்களால் கொண்டுவரப்படும் சாத்தியம் உண்டா? என்பதே.

இது இவ்வாறென்றால் இந்தியா தழுவிய மாநில சட்டமன்றங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்களில் 36 சதவீதமானோருக்கு எதிராகவும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன எனபது மேலும் அதிர்ச்சி தரும் தகவல்.

இதிலும் பெண்களுக்கு எதிரான மோசமான பாலியல் வன்முறை வழக்குகள் 48 பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிராக உள்ளது. இதில் 12 பேர் பி.ஜே.பியையும், 7 பேர் சிவசேனாவையும் 6 பேர் திருமல் காங்கிரசையும் சேர்ந்தவர்கள். 282 பி.ஜே.பி இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில், 98 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காங்கிரசின் 44 பாராளுமன்ற உறுப்பினர்களில் 8 பேரும், அதிமுகவின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேரும், சிவசேனாவின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பேரும், குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான பின்புலம் இந்திய ஜனநாயக நடைமுறையை பெரும் கேள்விக்குள் தள்ளியுள்ளது என்பது தான் உண்மை.

இந்தியப் பாராளுமன்ற மற்றும் 29 மாநில சட்டசபைகள், 7 யூனியன் பிரதேசசபைகள் உறுபினர்கள் என மொத்தம் 4896 பேர் உள்ளனர். இதில் 1765 பேருக்கு எதிராக அதாவது 36 சதவீதம் பேருக்கு எதிராக 3045 குற்றவியல் வழக்குகள் நீதிமன்றுகளின் முன் உள்ளன. அதில் பெரிய மாநிலங்களாக உத்திரபிரதேசம், தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்காளம் ஆகியனவே முன்னணியில் உள்ளன.

உத்திரபிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் 248 பேருக்கு எதிராக 539 வழக்குகள் உள்ளன. அடுத்து தமிழ் நாட்டில் 178 பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிராக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பீகாரில் 144 உறுப்பினர்களுக்கு எதிராக 306 வழக்குகளும், மேற்கு வங்காளத்தில் 139 உறுப்பினர்களுக்கு எதிராக 303 வழக்குகளும், ஆந்திரப் பிரதேசத்தில் 132 உறுப்பினர்களுக்கு எதிராக 140 வழக்குகளும், கேரளாவில் 114 உறுப்பினர்களுக்கு எதிராக 373 வழக்குகளும், டெல்லியில் 84 உறுப்பினர்களுக்கு எதிராக 118 வழக்குகளும், கர்நாடகாவில 82 உறுப்பினர்களுக்கு எதிராக 137 வழக்குகளும் உள்ளன.

இதில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் உள்ளமையை நீங்கள் அதீக கவனத்தில் கொள்ளலாம். அதாவது இது வட இந்தியாவை விட தென்னிந்தியாவிலேயே பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், இந்நிலை வேறு தொடர்ந்தும் மோசமடைந்து செல்லும் நிலையில், மக்களுக்காக, மக்களினால் உருவாக்கப்படும் ஆட்சி எனப்படும் ஜனநாயக முறைமை மக்களையே வதைத்து, ஆட்சிக்கட்டில் ஏறுவோரால் எவ்வாறு காப்பாற்றப்படும்? என தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

இதைவிட பணபலம் இருந்தால் தான் வெல்லாம் என்பது வேறு இன்னுமொரு சுவாரசியமான தரவு. அது குறித்து அடுத்துப் பார்ப்போம். ஆகமொத்த்தில் பணபலம் துணைகொண்டு பெரும் குற்றவாளியாக அவதாரம் எடுத்து, தமது வெற்றியை உறுதிசெய்து கொள்ளும் இவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது மட்டுமன்றி, பணம் கிடைத்தால் தன் நாட்டையே விற்றுவிடத் தயங்க மாட்டார்கள் என்பதே யதார்த்பூர்வமான உண்மை.

இந்நிலையில் இந்தியா உண்மையல் ஒரு ஜனநாயக குடியரசா? தன்னை பிராந்திய வல்லரசாக தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? போன்ற கேள்விகளுக்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகின்றேன். இது இந்தியாவின் 17ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் காலம்.