வடக்கில் குடிநீரின் அளவும் தரமும் பாதிப்பு

வட மாகாணத்தில், குடிநீரின் அளவும் தரமும் பாதிப்படைந்துள்ளதாக, மாகாண நீர்பாசன திணைக்களம் மற்றும், பிராந்திய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அசேதன விவசாய இரசாயனப் பயன்பாடு, கடல்நீர் உட்புகுதல், வடிகாலமைப்பு வசதிகள் குறைவாக இருக்கின்றமை, புனரமைக்கப்படாத உவர்நீர் தடுப்பணைகள், சீரமைக்கப்படாத கைவிடப்பட்ட குளங்களை மீள்சக்திபடுத்தாமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செலாளர், வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் வடகிழக்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கீழ்பாலி ஆறு நீர்தேக்கத்தினை நிர்மாணிப்பதுடன் இது வவுனிக்குளம், கொள்ளவிளான்குளம், கல்விளான்குளம், மல்லாவிகுளம் என்பவற்றுக்கு கீழ்நிலை நீரோட்டமாக நிர்மாணிக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், பயன்படுத்தாது கடலில் கலக்கும் நீரின் பெரும் பகுதி கீழ்பாலியாறு நீர்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான குடிநீர் வழங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீருக்கான கேள்வி வருடாந்தம் 22 மில்லியன் கனமீற்றர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நீர்தேக்கமானது மன்னாரிலுள்ள பெரும்பரப்புக்குளம் என்ற கைவிடப்பட்ட குளத்தினை புனரமைப்பதன் மூலம் நீர்தேக்கமாக மாற்றமுடியும் எனவும் வே.சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.