அதிகளவில் நெல்லுற்பத்தி செய்யப்பட்டதன் காரணமாக கடந்த வாரம் முதல் சந்தையில் அரிசியின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, 105 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 85 ரூபா வரையில் குறைவடைந்துள்ளது.
அத்துடன் 115 ரூபா முதல் 120 ரூபா வரையில் இருந்த சம்பா அரிசியின் கிலோ ஒன்றிற்கான விலை 90 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அடுத்த வாரம் சந்தையில் ஏனைய அரிசி வகைகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைவடையும் என அந்த நிறுவத்தின் பொருளாதார நிபுணர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரிசியின் விலை ஏற்றம் காரணமாக, நாடு மற்றும் சம்பா அரிசி வகைகளுக்கு இன்று முதல் அமுலாகும் வகையில் 80 மற்றும் 85 ரூபா உச்சவிலையினை அரசாங்கம் அறிவித்தது.
எனவே, அரிசியின் விலை தற்போது குறைவடைவதன் காரணமாக குறித்த உச்சவிலையினை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த விலை வீழ்ச்சி குறித்து நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது இறுதி தீர்மானமொன்று எடுக்கப்படும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலைய பொருளாதார நிபுணர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.






