எத்தியோப்பிய விமானத்தின் இறுதி நொடிகள்; இறுதியாக விமானி பேசிய அந்தரப் பேச்சு – வெளியானது ரகசியம்!

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு மார்ச் 10 அன்று கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நொடிகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன. இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் அதிகாரிகளிடம் பேசிய வால் ஸ்ட்ரீட் ஜெர்னல், இந்த விபத்து குறித்த ஒரு சித்திரத்தை வழங்குகிறது.

விமானத்தின் ரேடியோ சிக்னல் துண்டிக்கப்படுவதற்கு முன்பு ஒரு விமானி மற்றொரு விமானியிடம் ‘பிட்ச் அப், பிட்ச் அப்’ என்று கூறுவது பதிவாகி உள்ளது.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து 149 பயணிகள் மற்றும் 8 பேர் கொண்ட விமானக் குழுவுடன் போயிங் 737 மேக்ஸ் விமானம் கென்யாவின் நைரோபி நகரை நோக்கிக் கடந்த மார்ச் 10 ஆம் திகதி அன்று புறப்பட்டது. விமானம் மேலே எழும்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர். அந்த விமானத்தில் 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்தனர்.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் தயாரித்தது. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமான இது உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், இந்த விமான விபத்துக்குப் பின்னர் பல்வேறு நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க தடை விதித்தன. சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா ஐரோப்பியக் கண்டம்,இந்தியா, இந்தோனேசியா எனப் பல நாடுகள் தடை வித்துள்ள நிலையில் போயிங் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.