ஞானசாரரின் விவகாரத்தை அமைச்சரவையில் தெரிவித்த மனோ! ஜனாதிபதி, பிரதமர் கொடுத்த உத்தரவு

ஞானசாரரின் விவகாரத்தை அமைச்சரவையில் தெரிவித்த மனோ! ஜனாதிபதி, பிரதமர் கொடுத்த உத்தரவு

காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனாவினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையின் கவனத்துக்கு இன்று கொண்டு வந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், சக அமைச்சர்கள் ஆகியோரது கவனத்துக்கு இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.

தனது அமைச்சுக்குள் அல்லது எங்கேயும் எந்த ஒரு தீவிரவாத சக்திகள் வந்தாலும், என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் என கூறினார்.

எனது அமைச்சுக்கு சிங்கமாக வந்த பொதுபலசேனை அதிபர் ஞானசார தேரர் பூனையாக திரும்பி போனார்.

ஆனால், சாதாரண மக்களின் நிலைமை அதுவல்ல. அவர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் வருடம் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஆகிய கட்சிகளுக்கு நல்லாட்சிக்காக வாக்களித்த சிறுபான்மை மக்களை, எமது அரசாங்கத்திடமிருந்து பிரித்து, எதிர்வரும் தேர்தல் காலங்களில் வாக்களிக்காமல், அவர்களை வீட்டில் இருக்க செய்யும் திட்டமே இதுவாகும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசனின் கருத்துக்களை அடுத்து, அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், கபீர் ஹசீம், ரவுப் ஹக்கிம், துமிந்த திசாநாயக்க, சாகல ரத்னாயக்க ஆகியோரும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவற்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, சட்டம்ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பினார்.

இரக்கம் இல்லாமல் கடும் முறையில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதையடுத்து இது பற்றி கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

சம்பவங்கள் நடைபெறும் பிரதேசங்களில் பொறுப்பில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளை சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பு கூறவைக்கும் நடைமுறையை உடனடியாக அமுல் செய்யுமாறு, சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், தன்னை நேற்று முஸ்லிம் அமைச்சர்கள், எம்பீக்கள் சந்தித்ததாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க அமைச்சரவைக்கு தெரிவித்தார்.

அதையடுத்து இதை முஸ்லிம் பிரச்சினையாக பார்க்காமல், சட்டம், ஒழுங்கு பொது பிரச்சினையாக பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி, அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு தெரிவித்துள்ளார்.

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like