கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் கூறப்பட்ட இக்ரம் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று பணப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டுவந்தவர்களான முஸ்லிம் இளைஞரான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து 2017ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அடுத்த இரண்டு நாள்களில் வவுனியா நகர் பகுதியில் வைத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மொகமெட் இக்ரமுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்களை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட 4 வழக்குகளைப் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.
இந்தக் கைது நடவடிக்கையையின் மூலம் பெரும் வன்முறைகளைத் தடுத்தமையைப் பாராட்டியே இந்த கௌரமளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களின் முன்னாள் பொறுப்பதிகாரிகள், குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு கௌரவமளிக்கப்பட்டது.
இதேவேளை, நாடுமுழுவதும் வன்முறைக் கும்பலைகளைக் கட்டுப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.






