ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என கூறி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தெரிவித்து அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மறுமுனையில் அந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ்வாறான போலி நாடகங்களை அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கம் வழங்கும் சலுகைகளுக்கும், வரப்பிரசாதங்களுக்கும் அடிமையாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் தலைநகர் கொழும்பின் மருதானை டாலி வீதியில் அமைந்துள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போதே அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
ஜனநாயகம், உரிமை குறித்து வசைபாடும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தலை கூட நடத்த முடியாதுள்ளனர். எனவே எவ்வாறு மக்களின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்துக்கும் குரல் கொடுக்க முடியும்.
எனவே உணர்ச்சி அரசியல் வேண்டாம், நாட்டை பிளவுபடுத்துகின்ற அரசியல் வேண்டாம், எதிர்கால எமது சந்ததியினரின் வறுமையினையும், கல்வியினையும், பொருளாதாரத்தினையும் அபிவிருத்தி செய்யும் உணர்வுபூர்வமான நோக்கினை கொண்டதாக அரசியலை முன்னெடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.






