நீங்கள் தொடர்ந்து எம்மை ஏமாற்றுவதை போல செயற்பட்டால் தனிவழி செல்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை“ என பிரதமர் தலைமையிலான அரச பிரதானிகளை பார்த்து மேசையில் அடித்து சொன்னார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இரா.சம்பந்தனின் இந்த எச்சரிக்கையை விடுத்தபோது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புன்முறுவலுடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், அவரது எச்சரிக்கையை கணக்கிலெடுக்காமல் பல்வேறு விடயங்களை பற்றி பேசினார்.
இந்த சுவாரஸ்ய சம்பவம் இன்று நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு- பிரதமரிற்கிடையிலான கலந்துரையாடல் இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம் என்ற பெயரில் 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2,500 மில்லியன் இந்த வருடமும், 2,500 மில்லியன் அடுத்த வருடமும் ஒதுக்கப்படவுள்ளது. மாவட்டம் தோறும் 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி போதாது என இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார். “அரசியல் தீர்வும் இன்னும் வரவில்லை. அபிவிருத்தியிலும் நீங்கள் அசண்டையாக இருக்க முடியாது. போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிற்கு 300 மில்லியன் போதாது.
1000 மில்லியன் வரை உயர்த்த வேண்டும். அரசியல் தீர்வு முயற்சிகளிலும் அசமந்தமாக இருக்கிறீர்கள். அபிவிருத்தி விடயங்களிலும் நீங்கள் இப்படி ஏனோதானோ போக்கில் இருந்தால், நாம் எந்த முடிவையும் எடுக்க தயங்க மாட்டோம். தனிவழி செல்லவும் தயங்கோம்“ என்றார் சூடாக.
சம்பந்தர் திடீரென இப்படி சூடாக உரையாற்றிக் கொண்டிருக்க, அருகிலிருந்த எம்.ஏ.சுமந்திரன் அவரை சமாதானப்படுத்த முயன்றார். எனினும், இரா.சம்பந்தன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோது, ரணில் விக்கிரமசிங்க எதுவும் பேசாமல் புன்முறுவலுடன் அவதானித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் ரணில் உரையாற்றியபோது, இரா.சம்பந்தனின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்ததை போல காட்டிக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தகிறோம் என ரணில் சொன்னார்.
அதை தவிர, சம்பந்தனின் கோபத்தை அவர் கவனத்தில் கொண்டதாக காண்பிக்கவில்லை.






