அன்றாடம் தாங்கள் குளித்து வந்த குளத்தில் திடிரென எங்கிருந்தோ நுழைந்த முதலை பெண் ஒருவரை கடித்துக் கொன்ற சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வால்கட்டு குளத்தில் நீராடச்சென்ற பெண் ஒருவரே இவ்வாறு முதலைக் கடிக்கு உள்ளாகி பலியாகி உள்ளார்.
நேற்று (05) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
முதலை கடித்து உயிரிழந்தவர் கடுக்காமுனை கிராமத்தினைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான இளையதம்பி நல்லம்மா என இனங்காணப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குளத்தினை அருள்நேசபுரம், சோதன்கட்டு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக தங்களது அன்றாட தேவைகளுக்காக பாவித்து வருகின்றனர்.
ஆனால் முதல்தடவையாக இந்த குளத்தில் குளிக்கச் சென்றவரை முதலைகடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை முதலை கடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு இடம் இன்றி அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஏழு பிள்ளைகளின் தாய் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.






