முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கா அறிவிப்பு

முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கா அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் பின்னர், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட்  கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 39 வயதான குமார் சங்கக்கார, இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக தற்போது விளையாடி வருகின்றார்.

“ நான் லோட்ஸ் மைதானத்தில் 4 நாள் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே இறுதி சந்தர்ப்பமாகும். இன்னும் சில மாதங்களில் எனக்கு 40 வயதாகின்றது. பிராந்திய கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதற்கான சரியான நேரமும் இதுதான். ஒவ்வொரு கிரிக்கெட், அல்லது விளையாட்டு வீரர்களுக்கும் ஓய்வுக்கான நாளொன்றுள்ளது. அதுவரும்போது விலகிச்செல்ல வேண்டும்” என கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

முதல்தர போட்டிகளில் சரே அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார, இந்த சீசனில் 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளதுடன் மிடில்செக்ஸ் அணிக்கெதிராக இரு சதங்களையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான தொடரையடுத்த முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கக்கார அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like