யாழில் களமிறக்கப்படுகிறார் ரவிராஜின் மனைவி

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில், முன்னாள் எம்.பி ந.ரவிராஜின் மனைவி சசிகலா களமிறக்கப்படவுள்ளார். இதற்கான பேச்சுக்களை தமிழ் அரசுக்கட்சி முடித்துக் கொண்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க ரவிராஜ் சசிகலா கொள்கையளவில் சம்மதித்துள்ளதாக, தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசுக்கட்சி சார்பில் புதிய முகங்கள் சிலவற்றை களமிறக்கினாலே வெற்றியடையலாமென கட்சி கருதுகிறது.

இதனால் புதிய முகங்களை தேடும் படலத்தில் தமிழ் அரசு கட்சி நடத்தி வருகிறது.

இதே வேளை, தென்மராட்சியில் அருந்தவபாலன் என்ற வலுவான எதிர் வேட்பாளரை சமாளிக்க தமிழ் அரசு கட்சி விசேட கவனம் செலுத்தி வருகிறது.

கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர் வெற்றியடைவது, கட்சி தொடர்பான எதிர்மறையான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடுமென கட்சி கருதுவதாக தெரிகிறது.

இதனால், தென்மராட்சியில் வலுவான வேட்பாளர் ஒருவரை களமிறக்க தமிழ் அரசு கட்சி விரும்புகிறது.

தென்மராட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி ந.ரவிராஜ் தொடர்பாக, உள்ளூர் மக்களிடம் உயர்வான மதிப்பீடு இருப்பதால், ரவிராஜின் மனைவி சசிகலாவை களமிறக்குவது நல்ல பலனை தருமென கட்சி கருதுகிறது.

இதற்காக அவருடன் தமிழ் அரசு கட்சி பிரமுகர்கள் பேச்சு நடத்தி, அவரை கொள்கையளவில் சம்மதிக்க வைத்துள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலிலும் ந.சசிகலாவை களமிறக்க தமிழர் அரசு கட்சி விரும்பியிருந்தது. எனினும், அப்பொழுது சசிகலா அதை நிராகரித்திருந்தார்.

இதேவேளை, அருந்தவபாலனிற்கு எதிரான தமிழ் அரசு கட்சியின் இந்த புதிய நகர்வால், தென்மராட்சி அமைப்பாளர் கே.சயந்தன் தரப்பு கொஞ்சம் “அப்செற்“ ஆகியிருப்பதாக தெரிகிறது.

தென்மராட்சியில் அருந்தவபாலனிற்கு போட்டியான தரப்பாக சயந்தனை உருவாக்க கட்சி முயன்ற போதும், அது வெற்றியளிக்கவில்லை.

இதனால் சயந்தனை நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கும் எண்ணம் கட்சிக்கு தற்போது இருக்கவில்லை.

அடுத்த மாகாணசபையில் ஏதாவது அமைச்சு ஒன்றுக்கான வாக்குறுதியுடன் அவர், நாடாளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுக்கப்படலாமென தெரிகிறது.