யுத்தம் மாத்திரமே செய்தோம்! ஆனால் யாழ். மக்கள்..?

போருக்கு பிந்திய யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது இராணுவம் மனித நேய அமைதி படையாகவே நிலை கொண்டுள்ளது. போரில் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள், தாக்கங்கள் ஆகியவற்றில் இருந்து யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இன்னமும் மீளவே இல்லை என யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுக்கும், அம்மா, அப்பா, சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் இருக்கின்றனர்தான். எனவே யாழ்ப்பாண மாவட்ட மக்களின் ஏக்கங்கள் மிக நன்றாகவே எமக்கும் தெரியும்.

இருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி உண்ண உணவின்றி அந்தரிக்கின்ற இவர்களுக்கு எம்மாலான மனித நேய வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் பாதுகாப்பு ஏன்று எல்லா விடயங்களிலும் பரந்துபட்ட அளவில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து அவர்களின் வாழ்வாதாரம், வாழ்வியல், வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்திக் கொடுக்க அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு படை வீரனும் உழைக்கின்றோம்.

இதனால் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் இதயங்களை எம்மால் வெற்றிக் கொள்ள முடிந்து உள்ளது. அரசியல்வாதிகள்தான் வேறுவிதமான கதைகளைப் பேசித் திரிகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மகத்தான மனித நேய சேவைகளை அறிந்து வைத்து உள்ள பலரும் எம்மை வாழ்த்திப் பாராட்டுவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.