நில ஆக்கிரமிப்பை கைவிடாவிட்டால் போராட்டங்கள் வெடிக்கும்: முப்படையினருக்கு எச்சரிக்கை!

முப்படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் கைவிடாவிட்டால் மக்கள் போராட்டங்களின் ஊடாக அவற்றை தடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் காணி சுவீகரிப்பிற்கான அத்துமீறல்கள் தொடரும் பட்சத்தில் சர்வதேச நாடுகளுக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா படையினரின் தற்காலிக படை முகாம்களை நிரந்தரமான படை முகாம்களாக மாற்றுவதற்காகவும், புதிதாக படை முகாம்களை நிறுவுவதற்காகவும் அதேவேளை படையினரின் ஏனைய தேவைகளுக்காகவும் பொது மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 43 இடங்களிலுள்ள காணிகளை சிறிலங்கா இராணுவமும், கடற்படையினரும் கோரியுள்ளதாக பிரதேச செயலாளர்கள் ஏப்ரல் 08 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றிருந்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தியிருந்தனர்.

எனினும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் , சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினருக்கான காணிகளை கையகப்படுத்தும் விண்ணப்பங்களை தற்காலிகமாக கிடப்பில் போடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையிலேயே மக்களின் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தினர் சுவீகரிக்க முயற்சிப்பதற்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் முப்படையினர் முகாம்களை வைத்திருக்க முயற்சிப்பதன் ஊடாக பொது மக்களின் எதிர்ப்புக்களை இராணுவத்தினர் சந்திக்க நேரிடலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.