அவுஸ்திரேலியா சென்ற ஜனாதிபதிக்கு கன்பெராவில் வரவேற்பு

அவுஸ்திரேலியா சென்ற ஜனாதிபதிக்கு கன்பெராவில் வரவேற்பு

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கென்பராவைச் சென்றடைந்தார்.

ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் மார்க் பிரேசர், கல்வி அமைச்சரும் செனட் சபை உறுப்பினருமான சிமோன் பேர்மிங்ஹம், ஆளுநர் நாயகத்தின் பிரதிச் செயலாளர் எலிசபெத் கெலி ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

ஜனாதிபதி சிறிசேனவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவும் இருதரப்பு கூட்டுறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான அவரது கருத்துக்களை அறிந்து கொள்ளவும் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதியை வரவேற்ற செனட் சபை உறுப்பினர் பேர்மிங்ஹம் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி சிறிசேன, அவுஸ்திரேலிய பிரதமரை சந்தித்து பல உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாடுகளுக்குமிடையே வர்த்தகம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா, அஜித் பி பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, ஜனாதிபதியின் பொதுத் தொடர்புகள் பணிப்பாளர் நாயகம் சாந்த பண்டார ஆகியோர் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

தனது நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் ஜனாதிபதிக்கு விடுத்திருக்கும் இவ்வழைப்பானது அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவில் ஒரு புதிய திருப்பமாகும் என இலங்கை உயர்ஸ்தானிகர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் தெரிவித்தார்.

கல்வித்துறையின் அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ள கொழும்பு திட்டத்தின் முக்கிய உறுப்பு நாடாக அவுஸ்திரேலியா விளங்குகிறது. உபசரிப்பு, பண்ணைக் கைத்தொழில், விவசாயம் போன்ற துறைகளில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அவுஸ்திரேலியா எதிர்பார்த்துள்ளது.

இவ்விஜயத்தின் போது சுற்றாடல்துறை அமைச்சரான ஜனாதிபதி அவர்கள் கென்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு விஜயம் செய்து அங்கு ஒரு மகோகனி மரக்கன்றை நடவுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். அவுஸ்திரேலிய பிரதமர் டேர்ன்புல், வெளிவிவகார அமைச்சர் ஜுலீ பிசொப், பாதுகாப்பு அமைச்சர் மெரிஸ் பெய்ன், குடிவரவு, எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீடர் டுட்டன் ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.