யாழ். உரும்பிராய் தேவாலயத்தில் நடமாடிய மர்ம நபர்! பொலிஸார் விசாரணை

நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இத் தாக்குதல்கள் மேலும் பல இடங்களில் நடாத்தப்பட இருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ். உரும்பிராய் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிலும் மர்ம நபர் ஒருவர் நடமாடியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தேவாலயத்திற்கு வருகை தந்திருந்த குறித்த நபர், வியாபாரி என்று தன்னை அறிமுகம் செய்திருந்ததுடன் வயோதிப பெண் ஒருவரிடம் தேவாயலயத்தில் ஆராதனைகள் ஆரம்பிக்கும் நேரம், ஆராதனையில் பங்குபற்றும் மக்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை கேட்டு அறிந்துள்ளார்.

முன்னர் அறிமுகமில்லாத நபராக இருந்த போதிலும் குறித்த பெண் இதனை பெரிதுபடுத்தவில்லை.

ஆனால் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இது தொடர்பாக தேவாலய பங்குத் தந்தையிடம் குறித்த பெண்மணி முறையிட்டுள்ளார்.

இதனை அடுத்து பொலிஸாருக்கு பங்குத் தந்தை தகவல் தெரிவித்துள்ள நிலையில் தேவாலயத்திற்கு விரைந்துள்ள கோப்பாய் பொலிஸார் தேடுதல்களை மேற்கொள்வதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை குறித்த தேவாலயத்திலும் சூத்திரதாரிகள் குண்டுத்தாக்குதலை மேற்கொள்ள முனைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.