ஒரே நேரத்தில் 27 இடங்கள் இலக்கு! புலனாய்வு பிரிவினர் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள்

நாட்டில் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய சம்பவ தினத்தன்று ஒரே நேரத்தில் 27 இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளை வெடிப்புச் சம்பம் தொடர்பிலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த குண்டு தெஹிவளை சென் மேரிஸ் தேவாலயத்தை இலக்கு வைத்துக் கொண்டுவரப்பட்டதாகவும், பொலிஸாரின் பாதுகாப்பு காரணத்தினால், தாக்குதல்தாரி மீண்டும் தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கு குண்டை கழற்றி வைக்கும்போது அது வெடித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை தெஹிவளை சென் மேரிஸ் தேவாலயத்தின் காணிக்கை பெட்டி சம்பவனாலுக்கு முதல் நாள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தேசிய தவ்ஹீத் அமைப்பின் தலைவர் என கூறப்படும் முக்கிய சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹஷிம் சங்ரில்லா தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், அவரின் மரபணு சோதனைகளை நடத்தி உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தகவல்.

அத்துடன் தேசிய தவ்ஹீத் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய அரசியல் வாதிகள், செல்வந்தர்கள் உள்ளிட்ட பலர் தொடர்பிலான தகவல்கள் குற்றபுலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.