இலங்கையில் தாக்குதல் மேற் கொண்ட தாக்குதல்தாரிகள் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்!

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ள படுகொலையுடன் தொடர்புடைய தற்கொலைதாரிகளில் ஒருவர் பிரித்தானியாவில் பட்டப்படிப்பை முடித்தவர் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

இந்தத் தகவலை இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ள ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட அனைவரும் வசதியான நடுத்தர வர்க்கம் அல்லது மேல் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் ருவான் விஜேவர்தன கூறியுள்ளார்.

தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் குடும்பங்கள் பண ரீதியில் மிகவும் வலுவான நிலையில் இருக்கும் குடும்பங்கள் என்றும், இதனால் அவர்களுக்கு தமக்கு தேவையானதை சுதந்திரமாக செய்யக்கூடிய வாய்ப்புகள் முழுமையாக இருந்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள தற்கொலைதாரி பின்னர் அவர் பட்டப்பின் படிப்பை அவுஸ்திரேலியாவில் முடித்துக்கொண்டு சிறிலங்காவிற்கு திரும்பியிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.