மட்டக்களப்பு தற் கொலைக் குண்டுத்தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு கோரைப் பற்று மேற்குப் பிரதேசத்தின் ஓட்டமாவடியைச் சேர்ந்த உமார் என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நபர் ஏப்ரல் 20ஆம் நாள் சனிக்கிழமை சென் மேரிஸ் பேராலயத்தைச் சுற்றி நோட்டமிட்டுத் திரிந்ததை அங்குள்ள பங்குத்தந்தை ஒருவர் அவதானித்துள்ளார்.
அவர் மறுநாள் நடைபெறவிருந்த புனித ஞாயிறு வழிபாடுகளை முன்நகர்த்தி காலை 7.30 இற்குப் பதிலாக 7 மணிக்கு ஆரம்பிக்குமாறு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.
இப்பேராலயத்தில் தான் நத்தார் நள்ளிரவு வழிபாடுகளின் போது 2005ஆம் ஆண்டு மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்ப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
அத்துடன் 210 ஆண்டுகள் பழமைவாய்ந்த பேராலயம் வேறு.
அவ்வாறு காலை 7 மணிக்கு ஞாயிறு ஆரம்பித்த வழிபாடுகள் காலை 8 மணிக்கு முடிவடைந்துள்ளது. குறித்த நபர் உமார்இ காலை 8.30 மணியை அண்டி பேராலயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறான்.
அங்கு மக்கள் எவரும் இல்லாததைக் கண்டு விசாரித்துள்ளான் தற்கொலைதாரி

வழிபாடுகள் முடிவடைந்துவிட்டதாக அவனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா உறுதிப்படுத்தினார்.
8.30 மணிக்கே இவருடன் ஏனைந்த ஏனையவர்களும் தாக்குதலை கொழும்பு மற்றும் நீர்கொழும்பில் ஏககாலத்தில் மேற்கொண்டதை இங்கு நினைவு படுத்தலாம்.
ஏமாற்றமடைந்த உமார் பின்னர் 50 மீற்றர் தூரத்தில் இருந்த சியோன் தேவாலயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறான்.
அங்கு தன்னை பாஸ்டர் கணேசமூர்த்தி திருக்குமாரன் என அடையாளப்படுத்தியே உள் நுழைந்திருக்கிறான்.
அவன் 30 வயதை அண்டியவனாகவும் சாதாரண உயரமுடையவனாகவும் முதுகில் ஒரு பையையும் நெஞ்சோடு அணைத்தவாறு இன்னொரு பையையும் தாங்கியவாறே உள்நுழைந்ததாவவும் பாஸ்டர் ஒருவர் தெரிவித்தார்.

அங்கு அப்போது தான் வழிபாடுகள் ஆரம்பித்திருக்கின்றன. அங்கு அவன் காலை 9 மணியளவிலேயே குண்டுகளை வெடிக்கவைத்துள்ளான். இதிலேயே 14 இளையவர்கள் உட்பட இன்று வரை 30 பேர் பலியாகினர்.
சென் மேரிஸ் பேராலயத்தில் ஆயிரம் பேரலவில் புனித ஞாயிறு வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு இவ்வெடிப்பு நிகழ்ந்திருக்குமானால் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு போராலயங்கள் போல் மேலும் அதிகரித்த எண்ணிக்கையில் இழப்புக்கள் மட்டக்களப்பில் சம்பவித்திருக்கும் எனச் சொல்லப்படுகிறது.






