பலரை பலியெடுத்த குண்டு வெடிப்பு சம்பவங்கள்! மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை

வடக்கு, கிழக்கில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று துக்க தினம் அனுஸ்டித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதியன்று கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரையில் சுமார் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்படிருந்தது. அதில் சுமார் 25 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் அதாவது குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வந்தது.

இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் நாடாளாவிய ரீதியில் துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று விடுத்த அழைப்பின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் இன்று துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதை காண முடிகின்றது என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் தாக்குதல் நடைபெற்ற பகுதிகளிலும் இயல்பு நிலையேற்பட்டுள்ளதுடன் அப்பகுதியூடான போக்குவரத்தும் வழமை போல் நடைபெற்று வருகின்றது.

இதேநேரம் மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு படையினரால் ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு நகருக்குள் வரும் வாகனங்கள் விசேட அதிரடிப்படையினரின் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

இதேவேளை மட்டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தில் முக்கிய இடங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் மட்டக்களப்பில் உள்ள இளைஞர்கள் உட்பட பொது மக்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பாதுகாப்பு தரப்பினருக்கு உதவி வருகின்றனர்.