புலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது! சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கிய போராட்டம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கி போராட்டம். நீண்ட காலமாக தமிழ் மக்கள் தமது உரிமையை பெறுவதற்காக ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக ஒப்பந்தங்களின் மூலமாக, ஒத்துழைப்புக்களின் மூலமாக பல வகைகளில் சாத்திய ரீதியில், அகிம்சை வழியில் போராடி, தமது உரிமைகளை பெற முடியாத நிலையில், தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்தப்பட்ட ஒரு சூழலில், இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

ஆனால், இது ஒரு வேற விதமான போராட்டம். அடிப்படைவாதிகளுடைய போராட்டம். தங்களுடைய சில நம்பிக்கைகளை தாங்கள் நிலை நாட்ட வேண்டும். எவ்விதத்திலாவது அதை நிலைநாட்ட வேண்டும் என்று எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நியாயத்தின் அடிப்படையில், ஒரு நீதியின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டம் அல்ல. இதுவொரு அடிப்படை போராட்டம். அதனால்; அது இரண்டையும் ஒத்து பார்க்க முடியாது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று இலங்கை நாடும், வேறு பல நாடுகளும் அடையாளம் கண்டதற்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய சில செயல்கள் பயங்கரவாதத்தை வெளிகொணர்ந்ததாக அமைந்தது.

ஆனால் அவர்களுடைய போராட்டத்திற்கு பின்னால் ஒரு அடிப்படைவாதம் இருக்கவில்லை. ஜனநாயக உரிமைகளை பெறுவதற்காகவும், ஜனநாயக உரிமைகள் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட காரணத்தாலும், ஆட்சி அதிகாரங்கள் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழ் மக்களும் இந்த நாட்டில் சம பிரஜைகளாக வாழ விடப்படாத காரணத்தினாலுமே அவர்களுடைய போராட்டம் நடந்தது.

ஆனபடியால், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராட்டத்திற்கும், தற்போது நடந்துள்ள நிகழ்வுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி நோக்குவது தப்பான நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.