இலங்கையில் மீண்டும் புதிய தாக்குதல் நடத்தபடுமா? தயார் நிலையில் இருக்கும் ஸ்லீப்பர் செல்

சிறிலங்காவில் மீண்டும் புதிய கட்டத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார். இதனால் சிலிப்பர் ஷெல்கள் என்று அழைக்கப்படும் மற்றுமொரு சுற்று தாக்குதல்களுக்காக தயார் நிலையில் “உறங்கு நிலையில்” இருக்கும் தாக்குதல்தாரிகளைத் தேடி படைத்தரப்பினர் புலன் விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் அறிவித்திருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பினரை தேடி பாரிய தேடுதல் வேட்டையொன்று தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதிதாக வீதிச் சோதனைச் சாவடிகளை அமைத்தும், தீடிர் சுற்றிவளைப்புத் தேடுதல்களை நடத்தியும், சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் பெருமளவு படையினரை குவித்தும் இந்த தேடுதல்கள் இடம்பெறுகின்றன.

இந்த நடவடிக்கைகளில் சிறிலங்கா பொலிஸ், விசேட அதிரடிப்படை ஆகியோருக்கு மேலதிகமாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் சீ.என்.என் தொலைக்காட்சிக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரத்தியோக செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.

அந்த செவ்வியில், சிறிலங்காவில் மேலும் பல சுற்றுத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய ஆபத்து அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை பொலிசாரும், இராணுவத்தினரும் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவித்துள்ள சிறிலங்கா பிரதமர், இதன்போது இரண்டாம், மூன்றாம் சுற்றுத் தாக்குதல்களை நடத்துவதற்காக பதுங்கியிருக்கும் “உறங்கு நிலையில் உள்ள தற்கொலைதாரிகள் யார் என்பதையும் தேடி வருவதாக குறிப்பிட்டார்.

தற்போது பாதுகாப்பு தொடர்பில் எழுந்திருந்த ஆபத்து ஓரளவு தணிந்துள்ள போதிலும், அடுத்தவரும் நாட்களுக்குள் உறங்கு நிலையில் இருக்கும் தாக்குதலாளிகளை கைதுசெய்ய வேண்டியது அவசியம் என்றும் சிறிலங்கா பிரதமர் கூறியுள்ளார்.

இதனால் படைக் கட்டமைப்புக்கள் அனைத்தும் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள சிறிலங்கா பிரதமர், இம்முறை பாதுகாப்பு கடடமைப்பில் எந்தவித தவறும் இடம்பெறாது என்பதை தொடரச்ச்சியாக உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் தொடர்பில் தேடப்படுபவர்கள் ஆறு பேரினது புகைப்படங்களை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசார் வெளியிட்டுள்ளனர். இதில் மூன்று பெண்களினதும், மூன்று ஆண்களினதும் விபரங்கள் அடங்கியிருக்கின்றன. இதற்கமைய முகம்மட் ஹிப்ராஹீம் சாதிக் அப்துல் ஹக், முகம்மட் இப்ராஹீம் சாஹீத் அப்துல்ஹக், முகம்மட் காசீம் முகம்மட் ரில்வான் என்பவர்கள் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர பாத்திமா லத்தீபா, ஷாரா என்ற புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாத்திமா காதீயா ஆகிய இளம் பெண்களின் புகைப்படங்களையும் சிறிலங்கா பொலிசார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின் உடனடியாக குற்றப்புலனாய்வு பொலிசாருக்கோ, அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அறிவிக்குமாறும் பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலொன்றுக்கு தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்ட சந்தேகத்திற்கு இடமான லொரியை கொட்டாஞ்சேனை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இன்றைய தினம் வத்தளை நாயக்கந்த பகுதியில் வைத்து இந்த லொரி கைப்பற்றப்பட்டிருக்கின்றது.

சங்கிரிலா ஹோட்டல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்த முகம்மட் ஆசாம் முகம்மட் முபாரக் என்ற தற்கொலைதாரியின் பெயரிலேயே இந்த லொரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் கொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் விசேட அதிரடிப்படையினரால் வெடித்து சிதறவைக்கப்பட்ட வானும் முகம்மட் முபாரக் என்ற தற்கொலைதாரியின் பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டிருந்தது.