கனடாவுக்குள் வீசா இன்றிப் பிரவேசிக்கலாமென தவறான தகவல் பரப்பப்படுகின்றது

இலங்கையில் இருந்து கனடாவுக்குள் வீசா இன்றிப் பிரவேசிக்கலாமெனத் தவறான தகவல் பரப்பப்படுகின்றதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பதற்கான வீசாக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கனேடிய அரசு நீக்கிவிட்டதென்ற தவறான தகவல்கள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய விளக்களிப்பு நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லையென்பதைத் கவனத்திற்கு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் நிலைமை குறித்துக் கனேடிய அரசு தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில், இலங்கை குடிமக்களுக்கான வீசாக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் கனடாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுவோர் யாராக இருந்தாலும், பொருத்தமான வீசாக்களுக்கு விண்ணப்பித்து, வழமையான அனைத்து நிபந்தனைகளையும் திருப்தி செய்யவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.