கொழும்பு தற்கொலை தாக்குதல் சந்தேக நபர்களில் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூவருக்கு, கடந்த ஆண்டு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 2 பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

வவுணதீவு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுணதீவு வலையிறவு பாலம் பகுதியில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிசார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் போது பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன.

குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த இரண்டு துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.