நாவலப்பிட்டியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கண்டி – நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி இம்புள்பிட்டிய கீழ்ப்பிரிவு தோட்டப்பகுதியில் இரண்டு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் நாவலபிட்டி பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – நாவலப்பிட்டி – இம்புள்பிட்டிய கீழ்பிரிவு தோட்டப்பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று மாலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தமது உறவினர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து குறித்த நபர் மோதலை விலக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது மற்றுமொரு நபர் அவரை பிடித்து தள்ளியதால் அவரின் தலைபகுதி சுவர் ஒன்றில் மோதியதில் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்

74வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் இராமசந்திரன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டி நீதவான் தலைமையில் மரண விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.