தற்கொலை தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிடம் இருந்து இரண்டு மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொண்டமையை அவரின் சகோதரி மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இரு குறித்த தகவல்களை அவர் வாக்குமூலமாக வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“தன்னை கொழும்புக்கு வருமாறு சஹ்ரான் அழைத்திருந்தார். இதனையடுத்து கடந்த 12ம் திகதி கொழும்புக்கு சென்றிருந்தேன். கல்கிஸை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து சஹ்ரானை சந்தித்திருந்தேன்.
இதன்போது தக்கு இரண்டு மில்லியன் ரூபா பணத்தினை சஹ்ரான் தன்னிடம் கொடுத்தார்.
அதனை தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்துமாறு கூறினார்.” என மதனியா வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன் போது அவரது வீட்டில் இருந்து இரண்டு மில்லியன் ரூபாய் பணத்தை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இது குறித்து விசாரணை செய்த போது மதனியா இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முன்னதாக, தனக்கும் சஹ்ரானுக்கும் நீண்டகாலமாக தொடர்பு இல்லை என்றும், கடந்த ஏப்ரல் 18ம் திகதியில் இருந்து தனது குடும்பத்தினர் அனைவரும் காணாமல் போய் விட்டனர் என்றும் மதனியா கூறியிருந்தார்.
அத்துடன், சஹ்ரானின் நடவடிக்கைகள் மீது தனது கணவன் வெறுப்படைந்திருந்தார். என்றும் அதனால் அவருடன் தமக்கு தொடர்புகள் இல்லை என்றும் மதனியா சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






