மிசோரமில் மீட்கப்பட்ட நேபாள் மற்றும் ரோஹிங்கியா இளம்பெண்கள்!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மிசோரமில் இருந்து 31 நேபாள் மற்றும் ரோஹிங்கியா இளம்பெண்கள் அம்மாநில காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மனித கடத்தல் கும்பலால் கடத்தவரப்பட்டிருக்கூடும் என காவல்துறை சந்தேகிக்கின்றது.

இதனை கடந்த முதலாம் திகதி உறுதி செய்துள்ள மிசோரம் காவல்துறையின் ஐ.ஜி.(சட்டம் மற்றும் ஒழுங்கு) ஷான்லைனா, “கடந்த வாரம் நேபாளத்தைச் சேர்ந்த 23 பெண்களும், 8 ரோஹிங்கியா பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

15 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இப்பெண்கள் மனித கடத்தலில் சிக்கியவர்களாக இருக்கக்கூடும் என நாங்கள் சந்தேகிக்கிறோம்,” எனக் கூறியுள்ளார்.

இதில் நேபாளத்தைச் சேர்ந்த பெண்கள் மியான்மர் எல்லை அருகே உள்ள கிழக்கு மிசோரமின் சம்பாய் (Champhai) பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ரோஹிங்கியா பெண்கள் வடக்கு மிசோரமில் உள்ள வெரெங்கீட் (Vairengte) என்ற பகுதியில் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் நேபாள் பெண்களுடன் வந்த லால் பஹதூர் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஐ.ஜி. ஷான்லைனா, “ மிசோரம் காவல்துறை இதுகுறித்து விசாரித்து வருகிறது.

இந்த பெண்கள் அரசு விடுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மிசோரமில் உள்ள சுற்றுலா பகுதிகளை பார்வையிட வந்ததாக சொல்ல வேண்டும் என தங்களுக்கு சொல்லப்பட்டதாக நேபாள் பெண்கள் காவல்துறையிடம் தெரிவித்திருக்கின்றனர்.

அதே போல், ரோஹிங்கியா பெண்கள் கூறியவற்றை குறிப்பிட்டுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர்,

“மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதற்காக பங்களாதேஷில் உள்ள அகதி முகாமிலிருந்து மனித கடத்தல்காரர்களால் தாங்கள கடத்திவரப்பட்டதாக சொல்லியுள்ளனர்.

இவர்கள் கட்டாய பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எந்தவித வேலியும் இல்லாத சர்வதேச எல்லைப் பகுதியை கொண்டுள்ள மிசோரம், மியான்மருடன் 510 கிலோ மீட்டரையும் பங்களாதேஷுடன் 318 கிலோ மீட்டர் எல்லையையும் கொண்டிருக்கின்றது.